Published : 05 Mar 2022 01:15 PM
Last Updated : 05 Mar 2022 01:15 PM
கீவ்: ஜேப்பரோஜியா அணுமின் நிலையத்தைக் கைப்பற்றிய ரஷ்யா இன்று மரியுபோல் துறைமுக நகரை முடக்கியுள்ளது. சிறிது நேரம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள ரஷ்யா, அந்த நேரத்தைப் பயன்படுத்தி மக்கள் வெளியேறலாம் என்று கூறியுள்ளது.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை 10-வது நாளாக இன்று ரஷ்யா தொடர்ந்து வருகிறது. ரஷ்ய தாக்குதலில் ஒவ்வொரு நாளும் உக்ரைன் நிறைய இழப்புகளை சந்தித்து வருகிறது. நேற்று ரஷ்ய அணுமின் நிலையத்தை ரஷ்யா தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று, மரியுபோல் என்ற துறைமுக நகரத்தை சுற்றி வளைத்துள்ளது. இதனை அந்த நகரின் மேயர் உறுதி செய்துள்ளார். தலைநகர் கீவ் உள்ளிட்ட பெருநகரங்களில் மீதான தாக்குதல் தீவிரமாகத் தொடர்கிறது.
மரியுபோல் நகருக்கான குடிநீர், உணவு, மின்சார விநியோகம் முடக்கிவைக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தற்போது மைனஸ் 4 டிகிரி அளவில் குளிர்நிலை உள்ளது. இந்தக் கடுங்குளிர் சூழலில் மின் தடையால் ஹீட்டிங் முறைகளும் முடங்கியுள்ளன.
அஸோவ் கடற்கரையில் உள்ள மரியுபோல் நகரில் 4 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் உள்ளனர். இந்த நகரை ரஷ்யப் படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால், உக்ரைனுக்கு கடல்வழியாகக் கிடைக்கும் உதவிகள் தடைபடும். மேலும் க்ரீமியா, டான்பாஸில் இருந்து தடையின்றி ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் வரும்.
தாக்குதல் நிறுத்தம்: மரியுபோலைக் கைப்பற்றியுள்ள ரஷ்யப் படைகள், ரஷ்ய நேரப்படி 10 மணியளவில் தொடங்கி குறிப்பிட்ட சில மணி நேரம் வரை தாக்குதல் நடத்தப்படாது என்றும், அதைப் பயன்படுத்தி மரியுபோல், வொல்னோவாகா பகுதிகளில் இருக்கும் மக்கள் வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்காவிடம் உதவிகள் கோரவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் காணொலி வாயிலாக ஜெலன்ஸ்கி பேசவிருக்கிறார். உக்ரைனின் வடக்கு நகரமான செர்னிஹிவில் 47 பேர் ரஷ்ய தாக்குதலில் இறந்துள்ளனர். பள்ளிகள், குடியிருப்புகள் என எதுவும் ரஷ்யத் தாக்குதலில் மிஞ்சவில்லை.
முன்னதாக நேற்று ரஷ்யப் படைகள் ஜேப்பரோஜியாவில் உள்ள அணுமின் நிலையத்தைக் கைப்பற்றியது. இதனால் அடுத்த நகர்வாக ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன், ரஷ்யாவின் ராணுவ அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நிலைமை இவ்வாறாக இருக்க, பெலாரஸில் இந்த வார இறுதியில் ரஷ்யாவுடன் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இணைய தாக்குதல்: வான்வழி, தரைவழி தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் மீது இணையத் தாக்குதலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இணைய சேவை முடங்கியுள்ளது. உக்ரைன் இணையச் சேவைகளை ரஷ்யா முடக்கி வரும் சூழலில் அது ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிப்பதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment