Published : 05 Mar 2022 09:35 AM
Last Updated : 05 Mar 2022 09:35 AM
ரஷ்ய ராணுவ நடவடிக்கையால் மிக மோசமான இழப்புகளை சந்தித்துள்ள உக்ரைன் தொடர்ந்து நேட்டோவிடம் தங்களின் நாட்டை நோஃப்ளை ஜோனாக அறிவிக்க வலியுறுத்தியது. ஆனால், இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள நேட்டோ உக்ரைனைக் கைகழுவியுள்ளது.
முன்னாள் சோவியத் குடியரசு தேசமான உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்திலும், மேற்கத்திய ராணுவ கூட்டுக்குழுவான நேட்டோவிலும் இணைய கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. இதுவரை இரண்டிலுமே உக்ரைன் உறுப்பு நாடாகவில்லை.
இந்நிலையில் உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்துள்ளது குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செய்தியாளர்கள் சந்திப்பில், எங்களுக்கும் உக்ரைன் ரஷ்யா மோதலுக்கும் சம்பந்தமில்லை. உக்ரைனில் நடைபெறும் போர் அதைத் தாண்டி பரவாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. உக்ரைனின் நிலைமையை எங்களால் உணர முடிகிறது. ஆனால், உக்ரைனை நோ ஃப்ளை ஜோனாக அறிவித்தால் நாங்கள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதல் நடத்த நேரிடும். இது ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் போரில் ஆழ்த்தும். பெருந்துயரத்துக்கு வழிவகுக்கும். உக்ரைனுக்கு ராணுவப் படைகளை அனுப்புவதில்லை, நோ ஃப்ளை ஜோனாக அறிவிப்பதில்லை இல்லை என்பதில் நேட்டோ உறுப்பு நாடுகள் ஒற்றுமையாக இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
அதே போல் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளின்கனும் உக்ரைனை கைகழுவும் விதமாகப் பேசியுள்ளார். "நாங்கள் நேட்டோ எல்லைகளை தாக்குதலில் இருந்து பாதுகாப்போம். எங்கள் கூட்டணி தற்காப்புக் கூட்டணி. நாங்கள் எந்த மோதலையும் வரவேற்கவில்லை. ஆனால் எங்களைத் தேடி மோதல் வந்தால் விடுவதில்லை" என்று கூறியுள்ளார்.
நேட்டோவின் கதை: நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும். இதில் இணைவதை உக்ரைன் மிகப்பெரிய இலக்காகக் கொண்டிருக்க இணையவே கூடாது அது பிராந்திய பாதுகாப்புக்கு எதிரானது என்று ரஷ்யா கூறிவருகிறது.
நோ ஃப்ளை ஜோன் என்றால் என்ன? நோ ஃப்ளை ஜோன் என்று அறிவிக்க ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார். நோ ஃப்ளை ஜோன் என்று ஒரு பகுதியை அறிவித்தால் அந்த வான்வழிப் பரப்பில் போர் விமானங்கள், ட்ரோன்கள், பயணிகள் விமானம் கூட பறக்கக் கூடாது. போர்ப்பதற்றக் காலங்களில் ஒரு பகுதி நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்கப்பட்டால் அந்த வான் எல்லைக்குள் பறக்க முற்படும் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படலாம். 1991ல், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஈராக்கை நோ ஃப்ளை ஜோன் பகுதிகளாக அறிவித்தன. 2011ல் லிபியா மீது விமானங்கள் பறக்க ஐ.நா. தடை விதித்தது. ஆனால் உக்ரைனை நோ ஃப்ளை ஜோன் என்று அறிவித்தால் அமெரிக்காவும், நேட்டோ படைகளும் உக்ரைன் வான்பரப்பை பாதுகாக்க தங்களின் படைகளை அனுப்ப வேண்டும். ஆனால் அப்படிச் செய்தால் அது ரஷ்யாவுடன் நேரடியாக போர் தொடுக்க வழிவகை செய்யும். அதனாலேயே நேட்டோ உக்ரைனை நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்க மறுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT