Published : 04 Mar 2022 08:57 PM
Last Updated : 04 Mar 2022 08:57 PM
ஜெனிவா: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்த சுதந்திரமான விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சுதந்திரமான ஆணையம் ஒன்று அமைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வருவதற்காக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் இன்று (மார்ச் 4) வாக்கெடுப்பு நடத்தியது. உக்ரைனில் நிலவி வரும் மனித உரிமைகள் குறித்தான வரைவின் மீது 77 உறுப்பு நாட்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 32 உறுப்பு நாடுகள் வாக்களித்தன. ரஷ்யாவும், ஈரிட்ரியா ஆகிய இரண்டு நாடுகள், அந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், சூடான், வெனிசுலா உள்ளிட்ட 13 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
இந்தத் தீர்மனத்திற்கு ஆதரவாக பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நேபாளம், ஐக்கிய அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா முதலான நாடுகள் வாக்களித்திருந்தன.
பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவின் முடிவுப்படி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்த, உடனடியாக ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை ஏற்படுத்துவது என தீர்மானித்திருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது நான்காவது முறை: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து இத்துடன் நான்காவது முறையாக ஐ.நா. வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதனைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. இந்தியா, சீனா, யுஏஇ வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு தோற்கடித்தது.
அதேபோல், ஐ.நா. பொதுச் சபை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வாக்கெடுப்பும் பாதுகாப்புப் கவுன்சிலில் நடந்தது. அதையும் இந்தியா புறக்கணித்தது. இந்திய மாணவர்களை மீட்பதே தலையாயப் பிரச்சினை, உக்ரைன் ரஷ்யா மோதலில் பேச்சுவார்த்தையை விட சிறந்த தீர்வே இல்லை. இரு நாடுகளும் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறி வாக்கெடுப்பில் கலந்து கொள்வதை புறக்கணித்தது.
இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடந்தது. 193 உறுப்பு நாடுகள் உள்ள நிலையில் 141 நாடுகள் ரஷ்ய தாக்குதலைக் கண்டித்து வாக்களித்தன. ரஷ்யா உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி முற்றிலுமாக தாக்குதலை நிறுத்தி உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்த நாடுகள் வலியுறுத்தின. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தத் தீர்மானத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க வைக்க அமெரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், "இப்போதும் இந்தியாவின் முக்கியக் குறிக்கோள், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை குறிப்பாக மாணவர்களைப் பத்திரமாக தங்குதடையின்றி வெளியேற்றுவதில் மட்டுமே உள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்துமே அதன் சாசனப்படி நடந்து கொண்டு, சர்வதேச சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடக்க வேண்டும்" என்று அப்போது அவர் கூறியது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT