Published : 04 Mar 2022 09:43 AM
Last Updated : 04 Mar 2022 09:43 AM
கீவ்: உக்ரைனின் கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கார்கிவ், கீவ் நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அங்கிருக்கும் இந்தியர்கள் நடந்தாவது மேற்கு நகரங்களின் எல்லைக்கு வந்துவிடுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், கீவ் நகரிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அந்த மாணவர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், இப்போது அவர் உடல்நிலை எப்படியுள்ளது என்ற நிலவரம் தெரியவில்லை. ஆனால், அந்த மாணவர் கீவ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக போலந்தின் ரிஸோ விமான நிலையத்திலிருந்து பேட்டியளித்த அமைச்சர் வி.கே.சிங், ”கீவ் நகரில் இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அவர் இப்போது சிகிச்சையில் இருக்கிறார். போரின்போது இதுமாதிரியான சம்பவங்களை தவிர்க்க முடியாது. துப்பாக்கி குண்டுக்கு மதமோ, தேசியமோ தெரியாது. கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு தொடர்ந்து தூதரகம் அறிவுறுத்தி வருகிறது. உக்ரைனில் இன்னும்1700 மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்பதே இலக்கு” என்றார்.
ஏற்கெனவே கார்கிவில் உணவு வாங்கச் சென்ற போது ரஷ்ய குண்டுக்கு இரையாகினார் கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா. அந்த சோகம் அகல்வதற்குள் மேலும் ஒரு இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
உக்ரைனில் போர் வலுத்துவரும் நிலையில் அங்கிருந்து மாணவர்கள் வெளியேறுவது மிகவும் கடினமானதாக மாறிவருகிறது.
இந்திய மாணவர்கள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா, ஸ்லோவேகியா எல்லைகளுக்கு வந்துவிட்டால் அங்கிருந்து அவர்களை இந்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவருகிறது. அவ்வாறு தப்பித்துவரும் மாணவர்கள் பாஸ்போர்ட்டை இழந்திருந்தாலும் கூட அவர்களுக்கு உடனடியாக பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்து அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT