Published : 03 Mar 2022 12:17 PM
Last Updated : 03 Mar 2022 12:17 PM
புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்றைய குவாட் நாடுகளின் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவை நிர்பந்திக்க அமெரிக்கா இன்றையக் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.
போரை முடிக்கு கொண்டுவரும் வகையில் உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த உயர்நிலை தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.
முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது. ரஷ்யாவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக உக்ரைன் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குவாட் தலைவர்களின் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்றையக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. குவாட் நாடுகளில் 3 நாடுகள் ரஷ்யா எதிர்ப்பில் தீவிரமாக உள்ளன. அதேசமயம் இந்திய எந்த பக்கமும் சாராமல் நடுநிலையில் உள்ளது. இந்தியாவை நிர்பந்திக்க அமெரிக்கா இன்றையக் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ரஷ்யா நாட்டின் மீது மட்டுமல்லாமல் அதிபர் புதின் மீதும் பொருளாதாரத் தடைகளை கொண்டு வருவதில் அமெரிக்கா முனைப்பு காட்டுகிறது. சர்வதேச சமூகத்தை அந்த வழியில் வழிநடத்தவும் அமெரிக்கா முயலுகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் உக்ரைனுக்கு எதிராக ஒரு எதிர்மறையான நிலைப்பாட்டை முன்வைப்பதால் இந்தியாவுக்கு மறைமுகமாக நெருக்கடி ஏற்படலாம் எனத் தெரிகிறது.
இந்தியா ரஷ்யாவுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளது. அதேசமயம் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வகையில் வலுப்பெற்றுள்ளன. இந்தியாவின் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே இந்தியா சமநிலையுடன், இறுக்கத்துடன் பயணப்பட்டு வருகிறது.
உக்ரைன் விவகாரம் மட்டுமின்றி செப்டம்பர் 2021ல் வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டிற்குப் பிறகு தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்கள் பற்றியும் பேசவுள்ளனர்.
மேலும் இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், பருவநிலை மாற்றம், கல்வி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT