Published : 03 Mar 2022 09:58 AM
Last Updated : 03 Mar 2022 09:58 AM
நியூயார்க்: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து இத்துடன் மூன்றாவது முறையாக ஐ.நா. வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதனைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. இந்தியா, சீனா, யுஏஇ வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு தோற்கடித்தது. அதேபோல், ஐ.நா. பொதுச் சபை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வாக்கெடுப்பும் பாதுகாப்புப் கவுன்சிலில் நடந்தது. அதையும் இந்தியா புறக்கணித்தது. இந்திய மாணவர்களை மீட்பதே தலையாயப் பிரச்சினை, உக்ரைன் ரஷ்யா மோதலில் பேச்சுவார்த்தையை விட சிறந்த தீர்வே இல்லை. இரு நாடுகளும் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறி வாக்கெடுப்பில் கலந்து கொள்வதை புறக்கணித்தது.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடந்தது. 193 உறுப்பு நாடுகள் உள்ள நிலையில் 141 நாடுகள் ரஷ்ய தாக்குதலைக் கண்டித்து வாக்களித்தன. ரஷ்யா உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி முற்றிலுமாக தாக்குதலை நிறுத்தி உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்த நாடுகள் வலியுறுத்தின. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தத் தீர்மானத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க வைக்க அமெரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், "இப்போதும் இந்தியாவின் முக்கியக் குறிக்கோள், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை குறிப்பாக மாணவர்களைப் பத்திரமாக தங்குதடையின்றி வெளியேற்றுவதில் மட்டுமே உள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்துமே அதன் சாசனப்படி நடந்து கொண்டு, சர்வதேச சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்தியா, ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை மறைமுகமாக எடுத்துள்ளதாக உலக நாடுகள் விமர்சிக்கவும் செய்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT