Published : 03 Mar 2022 06:36 AM
Last Updated : 03 Mar 2022 06:36 AM

ரஷ்யா - உக்ரைன் போர் | உளவாளியுடன் மோதும் நகைச்சுவை நடிகர்!

ஜெலன்ஸ்கி, விளாடிமிர் புதின்

மாஸ்கோ/கீவ்: கடந்த 7 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனினும் தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களில் ரஷ்ய படைகள் முன்னேறுவதை உக்ரைன் ராணுவ வீரர்கள், உயிரை கொடுத்து தடுத்து வருகின்றனர். அரசியல், ராணுவ நடவடிக்கைகளில் அனுபவமிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, உக்ரைன் அதிபர் வாலோடிமிர் ஜெலன்கி தீரத்துடன் எதிர்த்து வருகிறார். ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் இருவர் மீதும் பதிந்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரது தாத்தா ஸ்பிரிடான் புதின்ரஷ்ய முன்னாள் அதிபர்கள் லெனின், ஸ்டாலினின் சமையலராகப் பணியாற்றினார். கடந்த 1952 அக்டோபர் 7-ம் தேதி ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் விளாடிமிர் ஸ்பிரிடோனோவிச் புதின், மரியா தம்பதியரின் மகனாகவிளாடிமிர் புதின் பிறந்தார். 12-வது வயதிலேயே ரஷ்யாவின் தற்காப்பு கலையான சம்போ, ஜப்பானிய தற்காப்பு கலையான ஜூடோ பயின்றார். பள்ளி படிப்புக்குப் பிறகுசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை நிறைவு செய்தார்.

அதன் பிறகு 15 ஆண்டுகள் ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிஎப்-ல் உளவாளியாக பணியாற்றினார். பின்னர் அரசியலில் கால் பதித்த புதின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் துணை மேயராகபதவி வகித்தார். கடந்த 1996-ம்ஆண்டில் தலைநகர் மாஸ்கோவுக்கு இடம்பெயர்ந்த அவர் அப்போதைய அதிபர் போரிஸ் எல்சினின் நிர்வாகக் குழுவில் இணைந்தார். குறுகிய காலத்தில் எல்சினின் வலதுகரமாக மாறிய புதின், கடந்த 1999-ம் ஆண்டில் ரஷ்யாவின் பிரதமராக பதவியேற்றார். கடந்த 2000-ம் ஆண்டில் அந்த நாட்டின் அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் ரஷ்யாவின் அசைக்க முடியாத தலைவராக புதின் கோலோச்சி வருகிறார்.

உக்ரைனின் தற்போதைய அதிபர் வாலோடிமிர் ஜெலன்கி, கடந்த 1978-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி மத்திய உக்ரைனின் கிரிவி ரிஷ் நகரில் அலெக்சாண்டர், ரிம்மா தம்பதியரின் மகனாகப் பிறந்தார். யூத குடும்பத்தை சேர்ந்த ஜெலன்கி, தன்னுடைய 16-வது வயதில் இஸ்ரேலில் கல்வி பயில விரும்பினார். ஆனால் அவரது தந்தை அனுமதிக்கவில்லை. கீவ்தேசிய பொருளாதார பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்த ஜெலன்கி, வழக்கறிஞராக பணியைத் தொடங்குவார் என்று பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் கலைத் துறையை நோக்கி நகர்ந்தார்.

உக்ரைன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி மக்களை சிரிக்க,சிந்திக்க வைத்தார். ரஷ்யாவை விமர்சித்து ஏராளமான நகைச்சுவை மீம்ஸ்களை வெளியிட்டு பிரபலமானார். அதன் பிறகு சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அவர், தொலைக்காட்சிகளில் பல்வேறு நகைச்சுவை தொடர்களை ஒளிபரப்பினார்.

பல்வேறு தொடர்களில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த 2015-ம் ஆண்டில் மக்களின் சேவகன் என்ற பெயரில் புதிய தொடரை தொடங்கினார். ஆசிரியர் ஒருவர், எவ்வாறு நாட்டின் அதிபர் ஆகிறார் என்பதே தொடரின் கரு. அதில் ஆசிரியராக ஜெலன்கி நடித்து மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார்.

அரசியல் மீதான ஆர்வத்தால் கடந்த 2018-ம் ஆண்டில் மக்களின் சேவகன் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். கடந்த 2019-ம்ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜெலன்கி, 73.2 சதவீத வாக்குகளை பெற்று அதிபராக பதவியேற்றார்.

தற்போதைய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ களத்தில் குதிக்கவில்லை. தனித்துவிடப்பட்ட நிலையில் வல்லரசு நாடானரஷ்யாவுடன், உக்ரைன் போரிட்டு வருகிறது. உண்மையை சொல்வதென்றால், உளவாளியாக இருந்து ரஷ்ய அதிபரான புதினுடன் நகைச்சுவை நடிகரான அதிபர் ஜெலன்கி வீர, தீரத்துடன் மோதி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x