Published : 03 Mar 2022 05:47 AM
Last Updated : 03 Mar 2022 05:47 AM
மாஸ்கோ: உச்சகட்ட போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இதுபற்றி ஆலோசனை நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனிடையே, போரை முடிக்கு கொண்டுவரும் வகையில் உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த உயர்நிலை தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.
சண்டையை நிறுத்தும் நோக் கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. உக்ரைனின் துறைமுக நகரமான கெர்சன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறி வித்துள்ளது. இதை அந்த நகர ஆளுநரும் உறுதி செய்துள்ளார்.
தலைநகர் கீவ் பகுதியை ரஷ்யப் படைகள் நெருங்கி வருவதாகவும், தலைநகரை காப்பாற்ற போராட்டம் நீடித்து வருவதாகவும் கீவ் நகர மேயர் விடாலி கிளிட்ஸ்ச்கோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் ஆலோசகர் கூறும்போது, ‘‘ரஷ்யாவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வரு கிறது’’ என்றார்.
6 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு
உக்ரைனில் இருந்து இதுவரை 6 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப் பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளி தரன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் செய்தியாளர்களிடம் அமைச்சர் வி.முரளிதரன் கூறியதாவது: உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு 20 ஆயிரம் இந்தியர்கள் தவித்து வந்தனர். இவர்களில் 4 ஆயிரம் பேர் பிப்ரவரி 24-ம் தேதிக்கு முன்பாகவே இந்தியா வந்தடைந்தனர். கடந்த செவ்வாய்கிழமை வரை மேலும் 2 ஆயிரம் பேர் இந்தியா வந்தடைந்தனர்.
இதுவரை சுமார் 6 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதியுள்ள இந்தியர்களும் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு இந்த பெயரை சூட்டியுள்ளது என்று சிவசேனா கூறுவது முற்றிலும் தவறு. இது அரசியல் பிரச்சினை அல்ல. உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு பற்றியது. அவர்களை பாதுகாப்பாக மீட்பதுதான் முக்கியம். அந்த நடவடிக்கைக்கான பெயருக்கு எந்த ஆட்சேபமும் இருக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT