Published : 02 Mar 2022 05:38 PM
Last Updated : 02 Mar 2022 05:38 PM

Never again... மவுனம் காக்காதீர்கள், வரலாறு மீண்டும் நிகழ்கிறது: ஜெலன்ஸ்கியின் அதிர்வுக்குரிய ட்வீட்

கீவ்: "Never again" - சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய யூத இன அழிப்புக்கு எதிரான சாட்சியாக விளங்கும் சொல் இது. இன்றும் ஜெர்மனியில் டசாவு முகாம் என பல இன அழிப்பு நினைவுச் சின்னங்களில் இந்த வார்த்தை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்வீட்டில் பயன்படுத்தியுள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர், "உலக நாடுகளே... 80 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட ’நெவர் அகெய்ன்’ என்று சொல்வதால் என்ன பயன்? உக்ரைனின் பாபின் யார் நகரில் தொலைக்காட்சி ஊடகக் கட்டிடம் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்துள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர். இதைப் பார்த்தும் உலகம் அமைதியாக இருந்தால். வரலாறு திரும்பிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். நாசிஸம் கள்ள மவுனத்தில்தான் உதிக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று, ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் நாடாளுமன்றக் கூட்டத்தில் தனது உரைக்காக உறுப்பினர்களின் கைத்தட்டைப் பெற்ற ஜெலன்ஸ்கி இந்த ட்வீட் மூலம் உலக அரங்கில் இன்னும் உயர்ந்து நிற்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

உலக நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவை போரில் பெற்றுவிட ஜெலன்ஸ்கி தன்னால் இயன்ற முயற்சிகள் அனைத்தையும் விடாமல் மேற்கொண்டு வருகிறார்.

சிஎன்என், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், "நேட்டோ எங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், எங்களின் பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் பேண, எங்கள் எல்லைகளைப் பாதுகாக்க, அண்டை நாடுகளுடன் நாங்கள் கொண்டிருக்கும் உறவைப் பேண, நாங்கள் முழுமையாக பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்வதற்கான உதவிகளை சட்டத்துக்கு உட்பட்டு செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

உக்ரைன் தோல்வியடைந்துவிட்டால் ரஷ்யப் படைகள் நேட்டோ நாடுகளின் எல்லைகளில் வந்து நிற்கும். நாளை இதே நிலைமை நேட்டோ நாடுகளுக்கும் ஏற்படலாம். இங்கே ஒவ்வொரு நாளும் போர் நடக்கிறது. அன்றாடம் உதவிகளும் தேவைப்படுகின்றன. உலக நாடுகள் உதவிகளைத் துரிதப்படுத்த வேண்டும்" என்றார்.

இந்நிலையில், இந்த ட்வீட் உலகத் தலைவர்களுக்கு பெரும் சவாலை முன்வைப்பதாக அமைந்துள்ளது. இன்றிரவு உக்ரைன், ரஷ்யா பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனின் விண்ணப்பத்தை ஏற்கும் அதிகமாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x