Published : 02 Mar 2022 11:37 AM
Last Updated : 02 Mar 2022 11:37 AM

'சர்வாதிகாரி புதின்... போருக்காக நீங்கள் கொடுக்கப் போகும் விலை மிகப் பெரியது!' - பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: "சர்வாதிகாரி புதினே, போருக்காக நீங்கள் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியது" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் முழுமையாக 7 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டுக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் பைடன், "ரஷ்ய சர்வாதிகாரி ஒருவர் வெளிநாட்டின் மீது படையெடுத்துள்ளார். அந்தப் போரால் உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்குப் பதிலடியாக அவர் உலகம் முழுவதுமிருந்து எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறார். நாம் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் ரஷ்ய பொருளாதாரத்தை அசைத்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராகப் போராடிவரும் உக்ரைனின் துணிச்சலை நாங்கள் பாராட்டுகிறோம். (பைடன் இவ்வாறு கூறியபோது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று கைத்தட்டி உக்ரைனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.) புதின், ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைக்கலாம் எனக் கனவு காண்கிறார். ஆனால், அது நடக்காது. அவர் தப்புக் கணக்குப் போடுகிறார். ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளை விதிப்பதோடு, இனி அமெரிக்க வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள ரஷ்ய பெரும் பணக்காரர்களின் படகுகள், சொகுசுக் குடியிருப்புகள், தனி ஜெட் விமானங்களை கைப்பற்ற தனியாக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரி புதினே, போருக்காக நீங்கள் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியது" என்றார். இருப்பினும், உக்ரைனுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்படாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இதற்கிடையில், ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவில் தனது பொருட்களின் விற்பனையை நிறுத்தியுள்ளது. ரஷ்ய ஊடகங்களான ரஷ்யா டுடே, ஸ்புட்னிக் ஆகிய செய்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதித்துள்ளன.

ரஷ்யா தாக்குதலை இறுக்கிவரும் சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகியுடன் அமெரிக்க அதிபர் பைடன் பேசியுள்ளார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யப் படைகள் பொதுமக்களின் குடியிருப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது எனத் தெரிவித்தார்.

ரஷ்ய தாக்குதலில் இதுவரை 536 பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்திருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் லிஸ் ட்ராஸ்லர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x