Published : 01 Mar 2022 07:26 AM
Last Updated : 01 Mar 2022 07:26 AM

உக்ரைனுக்கு சொந்தமான உலகின் பெரிய சரக்கு விமானத்தை தாக்கி அழித்த ரஷ்யா

கீவ்: உக்ரைனுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் தாக்கி அழித்து உள்ளது.

தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்துநடைபெற்று வருகிறது. எல்லையோர நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து குண்டு மழைபொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல பகுதிகளில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கீவ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்ய படையினரின் குண்டுவீச்சால் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் அழிக்கப்பட்டதாக உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாதெரிவித்தார். இந்த விமானம்உக்ரைனுக்குச் சொந்தமானதாகும்.

ஏஎன்-225 ‘மிரியா’ என்று பெயரிடப்பட்ட அந்த விமானம் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் கூறியதாவது:

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான மிரியா, ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டது. நமது மிரியாவை ரஷ்யா அழித்திருக்கலாம். ஆனால் வலுவான சுதந்திரமான ஜனநாயக ஐரோப்பியநாடு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான மிரியா விமானம் உக்ரைனின் அன்டோனோ நிறுவனத்தால் கடந்த 1985-ம் ஆண்டுதயாரிக்கப்பட்டது. 30 சக்கரங்கள், 6 இன்ஜின்கள், 290 அடி நீள இறக்கைகளைக் கொண்ட இதில் 4,500 கிலோமீட்டர் வரை தொடர்ந்து பறந்து செல்ல முடியும். கரோனாகால கட்டத்தில் உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை மிரியா விமானம் எடுத்துச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x