Published : 28 Feb 2022 09:46 PM
Last Updated : 28 Feb 2022 09:46 PM

அணு ஆயுத மும்முனைப் படைகள் தயார் - பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ரஷ்யாவின் அறிவிப்பு

கீவ்: ரஷ்ய ராணுவ நடவடிக்கை ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், கார்கிவ் நடந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அணு ஆயுதப் படை தயாராக உள்ளது என ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டது. தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்து இருநாடுகளும் பெலாரஸில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நேரப்படி 3.50 மணிக்குத் தொடங்கி நடந்து வருகிறது. உடனடியான போர்நிறுத்தம் தான் பேச்சுவார்த்தைக்கான தங்கள் இலக்கு என்று பேச்சுவார்த்தையில் என்று உக்ரைன் உறுதிபடக் கூறியுள்ளது. இதுவரை நடந்துள்ள போரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதால் போர் நிறுத்தமே தேவை என்றும் ரஷ்யப்படைகள் வெளியேற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இருநாடுகளிடையே ஒப்பந்தம் செய்வது அவசியம் எனவும், அதற்கு உக்ரைன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ரஷ்யா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கார்கிவ் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இன்று ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான கார்கிவ்வில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ரஷ்ய படைகள் குடியிருப்பு பகுதிகளில் குண்டுவீகிறார்கள்" என்று கவலை தெரிவித்துளளார்.

அணு ஆயுத படை தயார்: அதிபர் புதின் உத்தரவின் படி, அணு ஆயுத படை தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதின் நேற்று அணு ஆயுதப் படையை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்ட நிலையில், ரஷ்யாவின் அணு ஆயுத படைகள் தயாராக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தரையிலிருந்து ஏவப்படும் அணு ஆயுதம், அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல், ஏவுகணைகள் கொண்ட விமானங்கள் என மும்முனைப் படைகளாக தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கிய சில மணிநேரங்களில் இந்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x