Published : 28 Feb 2022 04:21 PM
Last Updated : 28 Feb 2022 04:21 PM
கீவ்: ஒட்டுமொத்த உலகமும் ரஷ்யா உக்ரைன் பேச்சுவார்த்தையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. பெலாரஸ் எல்லையில் ரஷ்ய குழுவும், உக்ரைன் குழுவும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தையில் திருப்புமுனை வருமா என்பது சதேகமே என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு அமைச்சர் ஒலக்ஸி ரெஸ்னிகோவ், வெளியுறவு இணை அமைச்சர் அலக்ஸாண்டர் லுகாஷென்கோ ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். ரஷ்ய தரப்பில் ரஷ்ய நாடாளுமன்றத்தின் சர்வதேச விவகாரக் குழுவின் தலைவர் லியோனட் ஸ்டல்ஸ்கி தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பெலாரஸில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி 2.30 மணிக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட பேச்சுவார்த்தை 3.50 மணிக்குத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு உடனடியாக உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும். சிறப்பு நடவடிக்கை மூலம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
எந்த வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்த உக்ரைன் தற்போதும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இன்னும் சற்றும் குறையாத விருப்பத்துடன் இருப்பது பேச்சுவார்த்தையிலும் எதிரொலிக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும், ஜெலன்ஸ்கியே இந்தப் பேச்சுவார்த்தை திருப்புமுனையை ஏற்படுத்துமென்பதில் சந்தேகமிருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தையில் என்ன முடிவு வரும் எனத் தெரியவில்லை; அவர்கள் முயன்று பார்க்கட்டும் என்று இருமாப்புடன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ரஷ்யப் படைகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதில், ’ரஷ்யப் படையினரே... உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பின்வாங்குங்கள். நீங்கள் உங்கள் கமாண்டர்கள் சொல்வதை நம்பாதீர்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
"எங்களின் இலக்கு ஐரோப்பாவில் இருக்க வேண்டும். சம வாய்ப்புடன், சம அந்தஸ்துடன் இருக்க வேண்டும். அது நியாயமான இலக்கு. அடையக் கூடிய இலக்கு என்றே நினைக்கிறேன். கடந்த 4 நாட்களில் மாஸ்கோ படைகள் 16 குழந்தைகளைக் கொன்றது. 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
நாங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். இது ஒழுக்க நெறி ரீதியாக தவறாக இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு பாதுகாப்பை கருதும்போது மிகவும் உபயோகரமானதாக இருக்கும். போர் முனையில் சண்டையிட விருப்பமுள்ள, திறனுள்ள, அனுபவமுள்ள கைதிகளை விடுவிக்க உள்ளோம். இந்தச் சூழலில் இங்கு அனைவருமே போர வீரர்கள் தான். இந்தப் போரில் எல்லோரும் வெற்றி பெறுவோம்" என்று கூறியுள்ளார்.
நேட்டோ அறிவிப்பும்; ரஷ்ய எச்சரிக்கையும்: பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நேட்டோ குழு, உக்ரைனுக்கு ராணுவ உதவியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை மூலம் விமர்சித்துள்ளது ரஷ்யா.
இந்நிலையில், நேற்றிரவு முதல் இன்று பிற்பகல் வரை தாக்குதலின் வேகத்தைக் குறைத்திருந்த ரஷ்ய ராணுவம் தற்போது மீண்டும் வான்வழித் தாக்குதலுக்கான சைரனை ஒலிக்கச் செய்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT