Published : 27 Feb 2022 12:34 PM
Last Updated : 27 Feb 2022 12:34 PM

ரஷ்ய தாக்குதலின் 4ஆம் நாள்: கார்கிவ் கைப்பற்றப்பட்டது; உலக நாடுகள் உதவி; இணைய சேவை வழங்கினார் எலான் மஸ்க்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இணைய சேவை, ராணுவ ஆயுதங்கள், நிதியுதவி என உக்ரைனுக்கு உதவிக்கரம் நீண்டு வருகிறது. அதேவேளையில், உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 471 உக்ரைன் ராணுவத்தினரையும் ரஷ்யப் படைகள் கைது செய்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி உக்ரைன் நாட்டில் அப்பாவி பொதுமக்கள் 198 பேர் பலியாகியிருந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உக்ரைனில் இதுவரை 240 அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கணிக்கிறது.

ரஷ்ய தரப்பில் 3500 ராணுவ வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

எண்ணெய் கிடங்குகள், எரிவாயு குழாய்கள் சேதம்: நேற்றிரவு உக்ரைனின் எரிவாயுக் குழாய்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதனால், அங்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கீவ் நகருக்கு அருகில் உள்ள வாசில்கிவ் நகரில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையத்தையும் ரஷ்யப் படைகள் தாக்கியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தாக்குதல் ஒருபுறம், தீப்பிழம்பு இன்னொரு புறம் என செய்வதறியாது திகைத்துள்ளனர். பலரும் அரசு அறிவித்துள்ள பங்கர்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கார்கிவில் நுழைந்தது ரஷ்யப் படைகள்: இதற்கிடையில் கார்கிவ் நகருக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்துவிட்டன. இது உக்ரைனின் வடகிழக்குப் பகுதி. இதனை உக்ரைனின் உள்துறை அமைச்சரான ஆன்டன் ஹெராஸ்சென்கோ உறுதிப்படுத்தியுள்ளார். கார்கிவ் நகரில் பல முக்கியமான மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அங்கு தமிழக மாணவர்கள் உள்பட ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். அங்கிருந்து தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த மாணவ, மாணவிகள் இந்திய அரசு மிகவும் மோசமான சூழலில் சிக்கியுள்ள தங்களை முதலில் மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேற்கிலிருந்து குவியும் உதவிகள்: போர் தொடங்கிய முதல் தாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துவந்தார். ரஷ்யாவுக்கு அனைவரும் அஞ்சுவதாகக் கூறியிருந்தார். பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உதவிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை அனுப்புவதாகக் கூறியுள்ளார். ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் ராணுவ உதவி அளிக்க முன்வந்துள்ளன. போலந்து நாடு உக்ரைனில் இருந்து வந்துள்ள 1 லட்சம் பேருக்கு தஞ்சம் அளித்துள்ளது. ஹங்கேரி, ருமேனியா நாடுகள் இதுவரை 50,000 உக்ரேனியர்களுக்கு தஞ்சம் கொடுத்துள்ளது.
இதுமட்டுமல்லாது, சர்வதேச பணப் பரிவர்த்தனையில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் சேவையில் இருந்து ரஷ்யாவின் வங்கிகளை நீக்கி அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன், கனடா, இத்தாலி ஆகிய நாடுகள் உத்தரவிட்டுள்ளன.

உக்ரைனுக்குள் 50% படைகள்.. இதற்கிடையில் எந்தத் தடையைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தலைமையிட உத்தரவை ஏற்று ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன. படையெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படைப்பலத்தில் 50% படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவிவிட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

எலான் மஸ்க் உதவி: ரஷ்ய தாக்குதல் வான்வழி, தரைவழி மட்டுமல்லாமல் சைபர் தாக்குதலாகவும் நீண்டது. இதனால் உக்ரைனில் இணைய சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் துணை பிரதமர் எலான் மஸ்கிடம் உதவி கோரினார்.
அது தொடர்பான ட்வீட்டில், "நீங்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற நினைக்கிறீர்கள். ஆனால் ரஷ்யா எங்கள் நாட்டை கைப்பற்ற நினைக்கின்றனர். நீங்கள் விண்வெளிக்கு ஏவுகணைகளை அனுப்பும் போது , ரஷ்யாவோ எங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது. தங்கள் நிறுவனத்தின் சாட்டிலைட் மூலம் எங்களுக்கு இணைய சேவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்ற எலான் மஸ்க் வெறும் 10 மணி நேரத்தில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை உக்ரைனுக்கு வழங்கியுள்ளார்.

சரியான பாதையில் செல்லும் சர்வதேச சமூகம்.. ஐ.நா.சபை, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச சட்டங்களை எல்லாம் அசட்டை செய்து ரஷ்யா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள வேளையில், ரஷ்யாவின் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டலாம். உக்ரைனின் தற்காப்புக்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்கலாம். சர்வதேச சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அதில் ஓட்டைகளை அடைத்துச் செயலாக்கத்துக்குக் கொண்டு வர சர்வதேச நாடுகள் அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். இதுதான் சரியான உதவியாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். இந்தச் சூழலில் உக்ரைனுக்கு உலக நாடுகள் உதவிகளை கொடுத்து வருகின்றன. அதேபோல் ரஷ்யா உள்பட உலகம் முழுவதும் மக்கள் திரண்டு போர் வேண்டாம் என்ற ஒருமித்தக் குரலை ஒலிக்கச் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x