Last Updated : 26 Feb, 2022 02:33 PM

22  

Published : 26 Feb 2022 02:33 PM
Last Updated : 26 Feb 2022 02:33 PM

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்; நடுநிலை வகித்த இந்தியா: சரியான முடிவா?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக நிபந்தனையின்றி திரும்ப வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஆஸ்திரேலியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஜார்ஜியா, ஜெர்மனி, இத்தாலி, லீசெஸ்டைன், லக்ஸம்பெர்க், நியூசிலாந்து, நார்வே, போலந்து, ருமேனியா, பிரிட்டன் ஆகிய 11 நாடுகள் வாக்களித்தன. ஆனால் 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி நேற்று முதலே இருந்தது.

ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. ஆனால் ரஷ்யாவும் இந்திய தரப்புடன் பேசியது. இந்த சூழலில் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. இருப்பினும் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் கொண்டு தோற்கடித்தது ரஷ்யா.

டி.எஸ்.திருமூர்த்தி

முன்னதாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி இந்தியா தரப்பு வாதங்களை வைத்தார். அவர் பேசும்போது ‘‘பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரே வழி. மனித உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது. மீண்டும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புமாறு அனைத்துத் தரப்பையும் வலியுறுத்துகிறோம்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்களை மீட்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இந்த காரணங்களுக்காக இந்தியா இந்த தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தவிர்க்கிறது’’ என்று கூறினார். இந்தியா நடுநிலை வகித்தது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதுகுறித்து வெளியுறத்துறை முன்னாள் செயலர் கணபதி கூறியதாவது:

உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் உலகம் முழுவதுமே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமானது. உக்ரைனில் மட்டுமே 20 ஆயிரம் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய நலன் மிக முக்கியம்.

வர்த்தகத்தை பொறுத்தவரையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இருநாடுகளுடனும் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது. பல கோடி மதிப்பில் உக்ரைனில் இருந்து இந்தியா பொருட்களை இறக்குமதி செய்கிறது. அதுபோலவே ஏற்றுமதியும் செய்கிறது.

அதேசமயம் ரஷ்யாவை பொறுத்தவரையில் இந்தியா தொடர்ந்து நல்லுறவுடன் இருந்து வருகிறது. சோவியத் யூனியனாக அந்த நாடு இருந்த காலத்தில் இருந்தே வர்த்தகம் மட்டுமல்லாமல் சர்வதேச கூட்டாளியாகவும் ரஷ்யா இருந்து வருகிறது.

ஆதலால் நம்மை பொறுத்தவரையில் இருதரப்பில் ஒரு தரப்பை ஆதரிக்க முடியாது. ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடக்கும்போது நாம் நடுநிலை நடுநிலை வகிப்பதே சரியாக இருக்கும். நாம் ஒரு தரப்பை ஆதரிக்க முடியாது. ஆதரிக்கவும் கூடாது. இதுவே சரியான அணுகுமுறை.

அதேசமயம் வாக்குளிக்கும்போது விளக்கம் அளிக்க கிடைத்த வாய்ப்பில் நமது தரப்பு வாதங்களை முன் வைத்துள்ளோம். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருதரப்பிடையே நடுநிலையாக இருந்து அமைதியை கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். அதுவே நமக்கு இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் சிறந்தது. சரியான தூரத்தில் இருந்தே பார்க்க வேண்டும்.

ஏனெனில் ரஷ்யாவும்- சீனாவும் நெருங்கிய கூட்டாளிகளாக உள்ளன. சீனாவுக்கும், நமக்கும் பல பிரச்சினைகளில் மோதல்கள் உள்ளன. எல்லை தகராறும் உள்ளது. அதுபோன்ற சூழலில் இந்த விவகாரத்தில் நாம் எடுக்கும் முடிவு ரஷ்யா- சீனா நெருக்கத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பளித்து விடக்கூடாது.

ரஷ்யாவில் இருந்து வர்த்தக ரீதியாக நாம் பல பொருட்களை இறக்குமதி செய்கிறோம். அதில் சிக்கல் ஏற்படலாம். உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குவாட் நாடுகளின் கூட்டத்திலேயே இந்தியா தனது நிலைப்பாட்டை ஏறக்குறைய வெளிப்படுத்தியது. குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அப்போது பேசும்போதே இது இந்தோ- பசிபிக் பற்றி மட்டுமே பேசுவதற்கான கூட்டம் எனக் கூறினார்.

இப்போது பொருளாதார தடையை விதிக்க அமெரிக்க கூட்டணி நாடுகள் முயன்று வருகின்றன. இதுபோன்ற ஒரு நடவடிக்கையில் இந்தியாவும் பாதிக்கப்படும். ரஷ்யாவுடன் விரிவான வர்த்தக கூட்டாளியான இந்தியாவுக்கும் அதனை தொடருவதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் தடை என்பது தனிநாடுகள் விதிப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதை ஏற்கெனவே இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x