Published : 26 Feb 2022 10:42 AM
Last Updated : 26 Feb 2022 10:42 AM

’சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கேயேதான் இருக்கிறோம்’: உக்ரைன் அதிபர் செல்ஃபி வீடியோ வெளியீடு

கீவ்: "தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்திட நாங்கள் இங்கே தான் இருக்கிறோம். எங்கள் ராணுவம் இங்கு தான் இருக்கிறது. குடிமக்கள் இங்குதான் இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கு இருக்கிறோம். இப்படித்தான் இருப்போம்" என்று பேசி செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி.

உக்ரைன் மீது பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. முதல் நாளிலேயே வான்வழிக் கட்டமைப்பை கையகப்படுத்தியது. இரண்டாவது நாளான நேற்று உக்ரைனுக்குள் தரை வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. செர்னோபில் அணு உலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. துறைமுக நகரங்களை சுற்றிவளைத்து உக்ரைனுக்கு கடல்வழியாக உதவிகள் கிடைக்காமல் முடக்கியது. நேற்று மாலை கீவ் நகரிலிருந்து மூன்று மைல் தலைவில் முகாமிட்ட ரஷ்யப் படைகள் அரசுப் பணியாளர்கள் குடியிருப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு இசைவு தெரிவித்துள்ளன.

இந்தச் சூழலில் தான் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி கீவ் நகரில் உள்ள அதிபர் குடியிருப்பு வளாகப் பகுதியில் தானே எடுத்த செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரைன் வாழ்க என உரக்கக் கூறி சுதந்திரத்தைப் பேணுவோம்" என்று உறுதியளித்துள்ளார். ஆலிவ் பச்சை நிற ராணுவ பாணி ஆடையில் பிரதமர், உயரதிகாரிகள் புடைசூழ உக்ரைன் அதிபர் காட்சியளித்தார். உக்ரைனைப் பாதுகாப்போம் என அவர் முழங்க, ரஷ்ய அதிபர் புதின் ஜெலன்ஸ்கி அரசு தீவிரவாதிகளால், போதைப் பேர்வழிகளால், நாசிக்களால் ஆனது என்று கடுமையாக விமர்சித்ததோடு உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை விடுத்து சீக்கிரம் அடிபணிய வேண்டும் என்று கூறினார்.

உக்ரைனுக்கு ஸ்வீடன் படைகளை அனுப்பி உதவுவதாகக் கூறியுள்ளது. அமெரிக்கா உதவிகள் பற்றி பரிசீலித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மிச்சல் உக்ரைன் அதிபர் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் எம்பெட் செய்து, சுதந்திரமான, ஜனநாயக உக்ரைனுக்கான உணர்வு மிகவும் வலிமையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியமும், நேட்டோவும் பொருளாதாரத் தடைகள், தீர்மானங்கள் தாண்டி நிறைய உதவிகளை உக்ரைனுக்கு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x