Published : 26 Feb 2022 06:27 AM
Last Updated : 26 Feb 2022 06:27 AM

தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் கடும் மோதல்; உதவி கோருகிறார் உக்ரைன் அதிபர் - ஆயத்தமாகும் அமெரிக்க படை

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கடுமையாக சேதமடைந்தது. வீட்டை இழந்த பெண் கதறி அழுகிறார்.படம்: பிடிஐ

கீவ்: உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. அந்த நாட்டு தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே நேற்று நீண்ட நேரம் கடுமையான சண்டை நீடித்தது. போர் தீவிரமானதால் பெரும் பதற்றம் எழுந்திருக்கிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் போர் தொடுத்தது. ஒரே நாளில் செர்னோபில் அணு உலை உட்பட உக்ரைனின் பெரும்பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன.

ரஷ்ய ராணுவத்தின் உளவுப் பிரிவான ஜி.ஆர்.யு.வின் கட்டுப்பாட்டின் கீழ் ஸ்பியட்நாஸ் என்ற கமாண்டோ படை உக்ரைன்ராணுவ வீரர்களின் உடையில் பதுங்கிகொரில்லா முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.தலைநகர் கீவின்முக்கிய பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் நேற்று முன்தினமே அறிவித்தன. இந்த சூழலில் தலைநகர் கீவின் மையப் பகுதியை ரஷ்ய படைகள் நேற்று நெருங்கின. அப்போது உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே நீண்ட நேரம் சண்டை நீடித்தது.

கூடுதல் அமெரிக்க படைகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “உக்ரைன் நேட்டோவில் அங்கம் வகிக்கவில்லை. அந்த நாட்டுக்கு அமெரிக்க படைகளை அனுப்ப முடியாது. எனினும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் அமெரிக்க வீரர்கள் அனுப்பப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் கருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ருமேனிய கப்பல் சேதமடைந்துள்ளது. நேட்டோவில் ருமேனியா அங்கம் வகிப்பதால் இதை காரணம் காட்டி ரஷ்யாவுடன் அமெரிக்கா போரில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனினும் ரஷ்யாவுடன் போரிட ஐரோப்பிய நாடுகளோ, அமெரிக்காவோ விரும்பவில்லை என்று பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் பிளாரன்ஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பாக சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உண்மைகளின் அடிப்படையில் சீனா முடிவுகளை எடுக்கிறது. பனிப்போர் போக்கு கைவிடப்பட வேண்டும். அனைத்துதரப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோபடைகளை நிலைநிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை தடுக்கவேராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி வலியுறுத்தல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் நேற்று முன்தினம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் தீர்மானங்களின்போது ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்கெனவேகொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதானவாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. தொடக்கம் முதல் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.

“உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அனைத்து தரப்பினரும் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும்” என்று ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்யா

போர் தீவிரமானதால் பெரும் பதற்றம் எழுந்திருக்கிறது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் உக்ரைன் அதிபர் வாலோடிமிர் ஜெலன்கி நேற்று கூறும்போது, “ரஷ்யாவின் முதல் எதிரி நான். என்னையும் எனது குடும்பத்தையும் வேட்டையாட ரஷ்ய வீரர்கள் தேடி அலைகின்றனர். ஆபத்து நேரத்தில் ஐரோப்பிய நாடுகள், நேட்டோ, உக்ரைனுக்கு உதவ வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் நேற்று கூறும்போது, “உக்ரைன் ராணுவம் தீவிரவாத அமைப்பு போல செயல்படுகிறது. தலைநகர் கீவில் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது. உக்ரைன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் உக்ரைன், ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x