Published : 25 Feb 2022 10:26 PM
Last Updated : 25 Feb 2022 10:26 PM

Russia-Ukraine crisis | நாள் 2 - ராணுவ அதிகாரம் முதல் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரை

உக்ரைனுக்கு எதிராக நேற்று ரஷ்ய அதிபர் புதின் ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். முதல் நாளான நேற்று ரஷ்ய வான்வழி கட்டமைப்புகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்தது. இரண்டாம் நாளான இன்று தரைவழித் தாக்குதலை ரஷ்யா அதிகப்படுத்தியுள்ளது. கீவ் நகருக்குள் காலையில் இருந்தே குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டுவருகிறது.

இன்று நடந்த முக்கிய சம்பவங்கள்

ரஷ்யா மீது ஜி7 நாடுகள் பொருளாதார தடை: அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டின் மீது ஜி7 சார்பில் மேலும் பல்வேறு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஜெர்மனி இன்று அறிவித்தது.

போரை நிறுத்த புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்: இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஐகர், உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டால் நிச்சயமாக போர் முடிவுக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில், பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நேர்மையான, உண்மையான பேச்சுவார்த்தைகளால் மட்டுமே ரஷ்யா நேட்டை குழு இடையேயான பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான ராணுவ தாக்குதல் குறித்த தகவல்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டார் என்று பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்தது.

உக்ரைன் அதிபர் உருக்கமான பேச்சு: ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், "எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம். இதுவரை வீரர்கள், பொதுமக்கள் என எங்கள் தரப்பில் 137 பேர் இறந்துள்ளனர். 316 பேர் படுகாயமடைந்துள்ளனர். நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் கீவில் தான் இருக்கிறோம். ரஷ்யப் படைகளின் இலக்கு நாங்கள் தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம். பொதுமக்கள் ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்குமாறு வேண்டுகிறோம். உக்ரைனை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதே ரஷ்யாவின் இலக்கு" என்று உக்ரைன் அதிபர் இன்று உருக்கமாகப் பேசினார்.

செர்னோபிலைக் கைப்பற்றியதால் பதற்றம்: உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து 65 மைல் தொலைவில் உள்ள பிரிப்யாட் ஆற்றின் கரைப் பகுதியில் செர்னோபில் அணு உலை இயங்கிவந்தது. செர்னோபில் உள்ள அணு உலை பாதுகாப்பு ஊழியர்களை ரஷ்யா சிறைப்பிடித்துள்ளது. ரஷ்ய படைகள் வீசிய குண்டு ஒன்று செர்னோபில் அணுக்கழிவில் விழுந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளி மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, நாங்கள் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பிணையாகப் பிடித்து வைத்துள்ள அணு உலை பாதுகாவலர்களை ரஷ்யா விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரஷ்ய மக்கள் முழக்கம்: ரஷ்யா போரைக் கைவிட வேண்டும் என்று அந்நாட்டு மக்களே குரல் கொடுத்துவருகின்றனர். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் “No to war!” போர் வேண்டாம் என்று முழக்கமிட்டனர். அவர்களை ரஷ்ய காவல்துறை அதிரடியாக கைதும் செய்தது.

800 ரஷ்ய வீரர்களை வீழ்த்திய உக்ரைன்: ரஷ்ய தரப்பில் இதுவரை 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்க்ள், 30 ராணுவ டாங்குகள், 130 ஏவுகணை யூனிட்டுகளை உக்ரைன் படைகள் வீழ்த்தபட்டன என்றும் 800 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது.

தலிபான் அரசு கவலை: "உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தை உற்று நோக்கி வருகிறோம். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து கவலை கொண்டுள்ளோம். வன்முறையைத் தவிருங்கள். பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை நீடிக்க வலியுறுத்துகிறோம்" என்று தலிபான் உக்ரைன் - ரஷ்ய போர் குறித்து கவலை தெரிவித்தது இன்றும் பெரும் கவனம் ஈர்த்தது.

பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அறிவிப்பு: உக்ரைன் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்ய தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

புதின் சொத்துகள் முடக்கம்: விளாடிமிர் புதின் மற்றும் அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் தொடர்புடைய ஐரோப்பா சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது புதின் போர் தொடுத்துள்ளதை அடுத்து, இந்த சொத்து முடக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.

ராணுவம் அதிகாரத்தை எடுத்து கொள்ளட்டும்: உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்க ரஷ்ய அதிபர் புதின் சிறிதுநேரம் முன்பு வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x