Published : 25 Feb 2022 08:55 PM
Last Updated : 25 Feb 2022 08:55 PM

உக்ரைன் போர் எதிர்வினை: விளாடிமிர் புதின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்புடைய சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது புதின் போர் தொடுத்துள்ளதை அடுத்து, இந்த சொத்து முடக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய படைகள் இரண்டாவது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ரஷ்ய வான்வழி கட்டமைப்புகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ள நிலையில், உலக அளவில் இதன் தாக்கம் வெளிப்பட்டுள்ளது. போரை நிறுத்தக் கோரி உலக நாடுகள் பலவும் ரஷ்ய அதிபர் புதினுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், விளாடிமிர் புதின் மற்றும் அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரின் ஐரோப்பா சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்புதல் அளித்துள்ளது.

27 நாடுகளை சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் செய்த விவாதத்தின் அடிப்படையில் இந்த சொத்து முடக்க உத்தரவு வெளிவந்துள்ளது. அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர்களுக்கு இருக்கும் சொத்துகள் முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், ரஷ்யாவின் நிதி, ஆற்றல், ஏற்றுமதி துறைகள் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

இந்த தடைகள் தொடர்பாக பேசிய ஐரோப்பிய பொருளாதார ஆணையர் பாவ்லோ ஜென்டிலோனி என்பவர், "நிச்சயமாக இந்தப் போருக்கு பொருளாதார ரீதியில் ஒரு தாக்கத்தை ரஷ்யா மீது நாங்கள் செலுத்துவோம். ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்களின் பேச்சுவார்த்தை பாரிஸில் நடக்கவுள்ளது. அந்தக் கூட்டத்தில் போர் பொருளாதாரத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக விவாதிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x