Published : 25 Feb 2022 09:48 AM
Last Updated : 25 Feb 2022 09:48 AM
கீவ்: "ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம்" என்று உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கமாகப் பேசியுள்ளார்.
உக்ரைன் மீது பிப்ரவரி 24 காலையில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அந்நாட்டு வான்வழிக் கட்டமைப்பு முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது. மேலும் தலைநகர் கீவில் ஊடுருவியுள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உருக்கமான பேச்சு வெளியாகியுள்ளது.
"எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம். இதுவரை வீரர்கள், பொதுமக்கள் என எங்கள் தரப்பில் 137 பேர் இறந்துள்ளனர். 316 பேர் படுகாயமடைந்துள்ளனர். நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் கீவில் தான் இருக்கிறோம். ரஷ்யப் படைகளின் இலக்கு நாங்கள் தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம். பொதுமக்கள் ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்குமாறு வேண்டுகிறோம். உக்ரைனை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதே ரஷ்யாவின் இலக்கு" என்று உக்ரைன் அதிபர் உருக்கமாகப் பேசியுள்ளார்.
அமெரிக்கா கைவிரிப்பு: இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகளை அனுப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளார். நேட்டோ குழுமமோ, ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று எச்சரித்ததோடு நிறுத்திக் கொண்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், ரஷ்யா போரை நிறுத்த வேண்டும். நேட்டோவிடமும் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதை ரஷ்யா புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் கூறியுள்ளது போல் இதுவரை களத்தில் இறங்கி உக்ரைனுக்கு ஆதரவாக யாரும் சண்டையிடவில்லை.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இரண்டாம் நாள் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் உக்ரைன் முழுவதுமே சைரன்களை ஒலிக்கச் செய்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்திவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT