Published : 25 Feb 2022 06:44 AM
Last Updated : 25 Feb 2022 06:44 AM

உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

உக்ரைனின் மேரிபோல் துறைமுக பகுதியில் கடற்படைத் தளம் செயல்படுகிறது. அந்த கடற்படை தளத்தை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் ரேடார்கள் சேதமடைந்தன.படம்: பிடிஐ

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படுகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

சோவியத் யூனியன் உடைந்தபோது, கடந்த 1991-ம் ஆண்டில் உக்ரைன் தனி நாடாக உதயமானது. அதன்பிறகும் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடாக உக்ரைன் நீடித்தது. கடந்த 2014-ம் ஆண்டில் ரஷ்யாவுடனான உறவை துண்டித்த உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நட்பு பாராட்டியது. அப்போது முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே மோதல் நீடித்து வருகிறது.

உக்ரைனின் டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களில் ரஷ்ய வம்சாவழியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்தப் பகுதிகளை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள் கடந்த 2014 முதல் உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பின்னணியில், கடந்த ஆண்டு நவம்பரில் உக்ரைன் எல்லைப் பகுதிகளில்சுமார் 2 லட்சம் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டனர். நேட்டோ படையில் உக்ரைனை இணைக்கக் கூடாது. சோவியத்யூனியனில் இருந்து பிரிந்த எந்தவொரு நாட்டையும் நேட்டோவில் சேர்க்கக் கூடாது. உக்ரைனின் டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று ரஷ்யா நிபந்தனை விதித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் அரசு தரப்பில் ரஷ்யாவுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் ரஷ்யா படைகளை குவித்திருக்கிறது என்று குற்றம்சாட்டிய அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோ படை வீரர்களை நிலைநிறுத்தியது .

இதனிடையே, கடந்த 22-ம் தேதி உக்ரைனின் டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்தது. அந்த மாகாணங்களுக்குள் ரஷ்ய படைகளும் நுழைந்தன. இதனால், உக்ரைனில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அதிபர் விளாடிமிர் புதினுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலையில் உக்ரைனின் வடக்கு, தெற்கு, கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. குறிப்பாக உக்ரைனின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. 70 தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரைன் தலைநகர் கீவில் அமைந்துள்ள ராணுவ தலைமையகம், வாலோடிமிர், டெர்னோபில், ரிவ்னி, நவோராட் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ தளங்கள் மீது ரஷ்ய போர் விமானங்கள் சரமாரி குண்டுகளை வீசின. இந்த தளங்கள் மீது ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டது.

இதேபோல தலைநகர் கீவுக்கு அருகில் அமைந்துள்ள விமானப்படைத் தளம், டினிபுரோ, மிர்கோரட் உள்ளிட்ட விமானப்படை தளங்கள் மீதும் செனிஹிவ், மைகோலிவ், மேரிபோல் உள்ளிட்ட கடற்படை தளங்கள் மீதும் குண்டுகள், ஏவுகணைகள் வீசப்பட்டன. ரஷ்ய பீரங்கி படைகள், கவச வாகனங்கள் பல்வேறு முனைகளில் இருந்து தரை வழியாக உக்ரைன் பகுதிகளுக்குள் நுழைந்தன. முக்கிய பகுதிகளில் விமானங்கள் மூலம் பாராசூட் வீரர்கள் உக்ரைனுக்குள் இறங்கினர்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தத் தொடங்கிய சில மணி நேரத்துக்கு பிறகு நேற்று காலை 6 மணிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

கடந்த 8 ஆண்டுகளாக உக்ரைனின் டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களில் இனப் படுகொலை நடந்தது. ஐரோப்பாவின் கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக நுழைய நேட்டோ முயன்று வருகிறது. இதை அனுமதிக்க முடியாது. இவற்றை கருத்தில்கொண்டு உக்ரைனின் ராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கைவிட்டு வீடு திரும்ப வேண்டும். ரஷ்யாவின் நடவடிக்கையை உக்ரைன் மக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாம் ஒன்றாக முன்னேறலாம்.

ரஷ்யாவுக்கு எதிராக வெளிநாடுகள் (ஐரோப்பிய நாடுகள்) ராணுவ நடவடிக்கை எடுக்க முயன்றால் வரலாறு இதுவரை சந்திக்காத பேரழிவை அந்த நாடுகள் எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

உக்ரைன் அதிபர் வாலோடிமிர் ஜெலன்கி, நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றியபோது, ‘‘உக்ரைன் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். எனினும் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுப்போம். புறமுதுகிட்டு ஓடமாட்டோம். ஹிட்லர் போன்று அதிபர் புதின் செயல்படுகிறார். போரில் பங்கேற்க விரும்பும் மக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும். நாட்டு மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார்.

அடுத்த 30 நாட்களுக்கு நாடு முழுவதும் அவசர நிலை அமல் செய்யப்படுவதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்டில் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் நிலவரப்படி உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்தன. அந்த நகர மக்கள், உயிர் பயத்தில் நகரை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கீவ் அருகேயுள்ள விமான தளம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்திருப்பதால் தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன. தலைநகர் கீவை கைப்பற்றியிருப்பதாக ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 50 ரஷ்ய வீரர்களை சுட்டுக் கொன்றதாகவும் 6 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் தரப்பில் சுமார் 40 வீரர்களும் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்திருப்பதை அந்நாட்டு காவல் துறை உறுதி செய்துள்ளது. எனினும் உக்ரைன் முழுவதும் போர் நடைபெற்று வருவதால், இருதரப்பிலும் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாகவும் ஆயிரக்கணக்கா னோரை ரஷ்ய படைகள் சிறை பிடித்திருப்பதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குத்தேரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். பல்வேறு உலக நாடுகளும் இதே வேண்டுகோளை முன்வைத்துள்ளன.

3-ம் உலகப் போர்?

மிகச் சிறிய மோதல்களே முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக அமைந்தன. தற்போதைய உக்ரைன் போரும் 3-ம் உலகப் போருக்கு வித்திடக்கூடும் என்று பாதுகாப் புத் துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் அணிவகுத்து நிற்கின்றன. அமெரிக்கா தலைமையிலான 30 நாடுகளின் வீரர்கள் அடங்கிய நேட்டோ படைகள் உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ நடவடிக்கை எடுத்தால் மூன்றாம் உலகப் போர் ஏற்படக்கூடும் என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x