Published : 24 Feb 2022 12:48 PM
Last Updated : 24 Feb 2022 12:48 PM
மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உலக நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவரும் சூழலில், ”உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து பிரத்யேக ஆயுதங்கள் மூலம் திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறோம். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கவில்லை” என்று ரஷ்யா தெரிவித்தது.
இந்நிலையில், கடைசியாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விமானப்படை தளங்களை முற்றிலுமாக அழித்துவிட்டோம். அதன் வான்வழித் தாக்குதல் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ரஷ்யாவின் 5 விமானங்களை வீழ்த்தியதாக உக்ரைன் அறிவித்தது. உக்ரைன் உள்துறை அமைச்சர் ஆன்டன் கெராஸ்சென்கோ அந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ”உக்ரைன் விமானப்படை கட்டமைப்புகளை வீழ்த்திவிட்டோம்” என்ற அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், 100-க்கும் மேற்பட்ட தங்களின் ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
அடுத்த இலக்கு துறைமுகம்... ஏற்கெனவே ரஷ்யா தனது தாக்குதல் திட்டம் பற்றி மேலோட்டமாகக் கூறியது. அதில், ”ராணுவ கட்டமைப்புகள், ஏர்பேஸ், துறைமுகங்கள்தான் எங்களின் இலக்கு” என்று கூறியிருந்தது. தற்போது துறைமுகங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடுவழியிலேயே திரும்பிய ஏர் இந்திய விமானம்... இதற்கிடையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் பாதியிலேயே திரும்பியது. அந்த விமானம் கீவ் விமான நிலையம் சென்று சேர்வதற்கு முன்னரே உக்ரைன் தனது விமான நிலையங்களை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி மூடியது. அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நிமிடங்களில் ரஷ்ய ராணுவம் விமான நிலையத்தின் அருகே தாக்குதலைத் தொடங்கியது. இந்தச் சூழலில் ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.
IMPORTANT ADVISORY TO ALL INDIAN NATIONALS IN UKRAINE AS ON 24 FEBRUARY 2022.@MEAINDIA @PIB @DDNEWS pic.twitter.com/e1i1lMuZ1J
— India in Ukraine (@IndiainUkraine) February 24, 2022
இதற்கிடையில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே பாதுகாப்பாக இருக்கும்படியும், பதற்றம் அடைய வேண்டாம் என்று இந்திய அரசு தூதரகம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT