Published : 24 Feb 2022 09:52 AM
Last Updated : 24 Feb 2022 09:52 AM

அமெரிக்க எச்சரிக்கை முதல் புதினின் போர் அறிவிப்பு வரை - உக்ரைன் நெருக்கடியின் சமீபத்திய டைம்லைன்

கிழக்கு உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைந்தன.

மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தத் தொடங்கிய நிலையில் ரஷ்ய அதிபரின் உத்தரவும் வெளியானது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. உக்ரைனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 18 முதல் 60 வயதுடைய அனைவரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. போர் தொடங்கியுள்ள நிலையில் இது மிகப் பெரிய மனித உயிர்கள் இழப்புக்கு வித்திடும் இதற்கு ரஷ்யாவை பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய உடனேயே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 100 அமெரிக்க டாலர் என்றளவில் உயர்ந்துள்ளது. இது கடந்த 2014க்குப் பின்னர் மிக உயரிய விலை எனக் கூறப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா பிரச்சினை உருவானது எப்படி? - இதோ ஒரு டைம்லைன் அப்டேட்.

நேட்டோவில் இணைய எதிர்ப்பு: சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர். இந்த நிலையில் 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுக்க மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷ்யா கூறுகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாக குற்றம்சாட்டுகிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு: நேட்டோவை உக்ரைன் விரும்ப மிக முக்கியக் காரணம் கிழக்கு உக்ரைனில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு காட்டுவதாகும். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டோனெட்ஸ்க் நகரின் வடபகுதி ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தப் பிரச்சினையை 90களில் இருந்து நாம் கவனிக்க வேண்டும். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திர நாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது.அதன் நீட்சி தான் இப்போது ஏற்பட்டுள்ள மோதல்.

இந்தப் பின்னணியில் கடந்த 3 மாதங்களாக நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் டைம்லைன்:

பிப்ரவரி 24 2022: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனால் கிழக்கு உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

நவம்பர் 2021: உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதற்கான சாட்சியாக செயற்கைக்கோள் புகைப்படம் வெளியானது. ராணுவ டாங்குகள், இன்னும் பிற போர் உபகரணங்கள், 1,00,000 வீரர்கள் என எல்லையில் குவிந்திருப்பது அந்தப் புகைப்படத்தில் தெளிவானது.

டிசம்பர் 7, 2021: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் மீது படையெடுத்தால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதிக்கும் என்றார்.

டிசம்பர் 17, 2021: ’நேட்டோ தனது அங்கமாக உக்ரைனை இணைக்கக் கூடாது. உக்ரைன் மட்டுமல்ல, முன்னாள் சோவியத் குடியரசின் எந்த ஓர் உறுப்பு நாட்டையும் இணைக்க முற்படக்கூடாது. இதனால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்துள்ளது. ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியான கிரிமியாவிற்கும் ஆபத்துள்ளது’ என்று ரஷ்யா தெளிவாக எடுத்துரைத்தது.

ஜனவரி 3, 2022: உக்ரைன் அதிபர் வோளோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு வாக்குறுதி அளிக்கிறார். ’ஒருவேளை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அமெரிக்கா உரிய வகையில் பதிலடி கொடுக்கும்’ என்று வாக்குறுதி அளித்தார். தொலைபேசி வாயிலாக பைடன், உக்ரைன் அதிபர் வோளோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு இதனைத் தெரிவித்தார்.

ஜனவரி 10, 2022: அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் ஜெனீவாவில் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தினர். மாஸ்கோ தரப்பில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்பட வேண்டும் எனக் கோர அமெரிக்கத் தரப்பு எதிர்க்க, பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

ஜனவரி 24, 2022: நேட்டோ தனது படைகளை உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்துகிறது. கிழக்கு ஐரோப்பாவில் தனது கப்பல்களையும், போர் விமானங்களையும் குவித்தது. உக்ரைன் தலைநகர் கியவ்வில் இருந்து அத்தியாவசியப் பணிகளில் இல்லாத தூதரக ஊழியர்கள் சிலர் வெளியேற்றப்பட்டனர். 8,500 படைகளை அமெரிக்கா உஷார் நிலைக்குக் கொண்டு வந்தது.

ஜனவரி 26, 2022: வாஷிங்டன் தரப்பில் ரஷ்யாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. நேட்டோவின் நிலைப்பாட்டை விளக்கி, மாஸ்கோ கூறும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு கொள்கை அடிப்படையில் நடைமுறைக்கேற்ற தீர்வு எட்டப்படும் என்று கூறியிருந்தது.

ஜனவரி 28, 2022: ரஷ்யாவின் மிக முக்கியமான பாதுகாப்பு கோரிக்கைகளுக்கு அமெரிக்கா பதிலளிக்கவே இல்லை. ரஷ்யா இன்னும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது எனக் கூறியது. இதற்கிடையில் உக்ரைன் அதிபர் வோளோடிமிர் ஜெலென்ஸ்கி ’மேற்கத்திய நாடுகள் பதற்றத்தை உருவாக்க வேண்டாம், இதனால் எங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும்’ என்று எச்சரித்தார்.

ஜனவரி 31, 2022: உக்ரைன் விவகாரம் தொடர்பான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய சிறப்பு அமர்வில், அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருவொருக்கொருவர் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தன.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் க்ரீன்ஃபீல்டு, ’உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலக பாதுகாப்பே அச்சுறுத்தல்’ என்றார்.

ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் வேஸிலி நெபஞ்சியா, ’ரஷ்யாவுக்கு படையெடுப்பது குறித்து எந்தத் திட்டமும் இல்லை என்று மீண்டும் மீண்டும் நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தாம் போர் பதற்றம் என்று தம்பட்டம் அடிக்கின்றன’ என்றார்.

படங்கள் உதவி மேக்ஸார் டெக்னாலஜிஸ்

பிப்ரவரி 1, 2022: ரஷ்யாவுக்கு உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என்று அந்நாட்டு அதிபர் புதின் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவின் பாதுகாப்பு கோரிக்கைகளை புறந்தள்ளி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

பிப்ரவரி 6, 2022: அமெரிக்க ஊடகங்களில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஏதுவாக 70% ராணுவ பலத்தை எல்லையில் ரஷ்யா கட்டமைத்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டன.

பிப்ரவரி 8, 2022: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோ வருகிறார். புதினுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ’ரஷ்யா நிச்சயமான உக்ரைன் பிரச்சினையைப் பெரிதாக்காது’ என்று கூறிச் செல்கிறார். ஆனால் இதனை எதிர்க்கும் க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ’இப்போதைய சூழலில் ரஷ்யாவும், பிரான்ஸும் எந்த ஒரு ஒப்பந்தத்துக்கும் வரவில்லை’ என்றார்.

பிப்ரவரி 10 2022: பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரூஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால், அது பலனற்றதாக முடிகிறது. இந்த பேச்சுவார்த்தை குறித்து லாவ்ரோவ் செய்தியாளர்களிடம், ’இது ஒரு காதுகேளாதவருக்கும், பேச இயலாதவருக்கும் இடையே நடந்த உரையாடல் போன்றது’ என்று விமர்சித்தார். பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரூஸ், ’உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மேற்கத்திய நாடுகள் விதிக்கும் தடையை எதிர்கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்தார். ’உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் படைகள் குவிப்பு யாரையும் அச்சுறுத்தாது’ என்று கூறினார்.

பிப்ரவரி 11, 2022: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ’உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கும். ஏன், ஓரிரு நாட்களில் கூட நடக்கும். அதனால், அமெரிக்கர்கள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

ஜேக் சல்லிவன்


போலந்துக்கு கூடுதலாக 3000 அமெரிக்கப் படைகள் அனுப்பிவைக்கப்பட்டன. பல்வேறு நாடுகளும் உக்ரைனிலிருந்து தங்கள் மக்களை வெளியேறுமாறு கூறின.

பிப்ரவரி 12, 2022: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் காணொலி வாயிலாக சந்தித்துப் பேசினார். அப்போது, ’உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணவே மேற்கத்திய நாடுகள் விரும்புகிறது’ என்றார்.

அதற்கு பதிலளித்த புதின், ’ரஷ்யாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு அமெரிக்காவும் நேட்டோவும் சரியாக விளக்கமளிக்கவில்லை’ என்று கூறினார். ’உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்படக் கூடாது. கிழக்கு ஐரோப்பாவில் இருந்து நேட்டோ படைகள் திரும்பப்பெறப்பட வேண்டும்’ என்று கூறினார்.

பிப்ரவரி 20: உக்ரைனின் 2 மாகாணங்களை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. இதனால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனில் 24 மாகாணங்கள் உள்ளன. இதில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களில் ரஷ்ய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் டான்ஸ்க், லாஹன்ஸ்க் பகுதிகளின் தலைவர்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி இரு பகுதிகளையும் தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. உலக நாடுகளும் இதை அங்கீகரிக்க வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவித்தார்.

பிப்ரவரி 22: உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில் படைகளை நிறுத்தியுள்ளது ரஷ்யா. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்காவின் மாக்ஸார் டெக்னாலஜிஸ் வெளியிட்டது.

இவ்வாறாக ஒவ்வொரு நாளும் பொழுதும் போர்ப் பதற்றம் மிகுந்த உக்ரைன் - ரஷ்யா பிரச்சினை வலுவடைந்து வந்த நிலையில் இன்று (பிப்.24, 2022) காலை ரஷ்யா கிழக்கு உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x