Published : 23 Feb 2022 01:33 PM
Last Updated : 23 Feb 2022 01:33 PM
மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில் படைகளை நிறுத்தியுள்ளது ரஷ்யா. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்காவின் மாக்ஸார் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில் தெற்கு பெலாரஸில் உள்ள மோசிர் விமான தளத்தில் படைகளின் முகாமும், 100 வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமான தளம் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ.-க்கும் குறைவான தொலைவிலேயே இருக்கிறது.
இதுதவிர மேற்கு ரஷ்யாவின் போச்செப் பகுதியில் கூடுதல் படைகளை நிறுத்த ஏதுவாக நிலங்கள் பெரிய அளவில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கு பெல்கோரோட் பகுதியில் ராணுவ மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. படைவீரர்கள் தங்கும் கூடாரங்களும் போடப்பட்டுள்ளன. இவை உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீ தொலைவில்தான் உள்ளன.
உக்ரைனின் கிழக்கு எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் ஹெவி எக்யுப்மென்ட் ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ் எனப்படும் கனரக டாங்குகள் ஆகியன நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதமாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களை நிறுத்திவைத்துள்ளதாக அமெரிக்கா, நேட்டோ படைகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
பொருளாதரத் தடைகள்: இதற்கிடையில், ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளைச் சுதந்திர நாடாக அறிவித்தார். இது உக்ரைன் மீதான படியெடுப்புக்கு தோதாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதனையடுத்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றப்போவதாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, புதின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளைச் சுதந்திர நாடாக அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், அது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் எனவும் கூறியுள்ளதோடு, ரஷ்ய மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்யா மீது உடனடியாக பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT