Published : 22 Feb 2022 07:10 PM
Last Updated : 22 Feb 2022 07:10 PM

பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம்: இம்ரான் கானின் விருப்பம்

கோப்புப் படம்

மாஸ்கோ: "இரு நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் செய்ய விரும்புகிறேன்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு விருந்தினராக பயணம் மேற்கொண்டுள்ளார். மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க இருக்கும் அவர், அதற்கு முன்னதாக, ரஷ்ய டுடேவுக்கு அளித்த பேட்டியில்தான் இந்திய பிரதமருடன் விவாதம் நடத்த விரும்புவதாக சொல்லியுள்ளார். அதில், "இந்தியா ஒரு எதிரி நாடாக மாறியதால் அவர்களுடனான வர்த்தகம் குறைந்துவிட்டது. அனைத்து நாடுகளுடனும் வர்த்தக உறவுகளை வைத்திருக்க வேண்டும் என்பதே எனது அரசாங்கத்தின் கொள்கை.

தற்போது, ஆசியாவில் வரையறுக்கப்பட்ட நாடுகளுடன் மட்டுமே வர்த்தகம் செய்யப்பட்டுவருகிறது. ஈரான் ஏற்கெனவே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ளது. அதேநேரம் ஆப்கானிஸ்தான் பல தசாப்தங்களாக போரில் ஈடுபட்டுள்ளது. இதனால், வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவேதான், கருத்து வேறுபாடுகளை தீர்க்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் செய்ய விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று இதே கருத்தை இம்ரான் கானின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் என்பவரும் தெரிவித்திருந்தார். "இந்த நேரத்தில் இந்தியா உடனான வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டியது மிக அவசியம். இரு நாடுகளுக்குமே அது பயனுள்ளதாக அமையும். எங்கள் நாட்டின் வர்த்தக அமைச்சகம், இந்தியா உடன் வர்த்தகத்தை தொடங்குவதில் உறுதியாக உள்ளது. தனிப்பட்ட முறையில் இதே நிலைப்பாட்டில் தான் நானும் உள்ளேன்" என்று தெரிவித்தார். அவர் தெரிவித்த அடுத்த நாளில் இம்ரான் கானும் அதே கருத்தை பிரதிபலித்துள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x