Published : 21 Feb 2022 03:47 PM
Last Updated : 21 Feb 2022 03:47 PM
மாஸ்கோ: படையெடுப்பின்போது யாரைக் கொல்ல வேண்டும், யாரை முகாமுக்கு அனுப்ப வேண்டும் என ரஷ்யா பட்டியல் வைத்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் குழு தலைவருக்கு இது தொடர்பாக அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், உக்ரைன் படையெடுப்பின் போது அந்த நாட்டில் உள்ள யாரையெல்லாம் கைது செய்ய வேண்டும், யாரையெல்லாம் வதை முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என ரஷ்யா பட்டியலிட்டு வைத்துள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் சாதாரண மக்கள் அமைதி வழியில் நடத்தும் போராட்டங்களைக் கலைக்கவும் மிகக் கொடூரமான வழிகளை ரஷ்யா திட்டமிட்டு வைத்துள்ளதாக எங்களுக்குத் தகவல் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பேசெலட்டுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நெல் க்ராக்கர் அனுப்பியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் மனித உரிமை அத்துமீறல்கள் பெருகும். உக்ரைன் மக்கள் கடத்தப்படலாம், அரசியல் விரோதிகள் சிறைப்பிடிக்கப்படலாம், மத, இன சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகலாம் என்று அமெரிக்கா அக்கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளது.
ஆனால் மாஸ்கோ தரப்போ உக்ரைன் மீது தாங்கள் எவ்வித தாக்குதலையும் திட்டமிடவில்லை என்று கூறி வருகிறது. மேலும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அணியில் உக்ரைன் இணையக் கூடாது. கிழக்கு ஐரோப்பாவில் மேற்கத்திய நாடுகள் படைக் குவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி வருகிறது.
சர்ச்சை பின்னணி: 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திர நாடாக உக்ரைன் உருவானது.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. அதேவேளையில் உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக் கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்று வருகிறது. இந்தச் சூழலில் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...