Published : 19 Feb 2022 09:13 AM
Last Updated : 19 Feb 2022 09:13 AM

அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்?- ஜோ பைடன் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்: ரஷ்யப் படைகள் வரும் நாட்களில் உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், எந்தநேரத்திலும் போர் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. அதேவேளையில் உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக் கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்று வருகிறது. இந்தச் சூழலில் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பெலாரஸ் நாட்டுடன் வழக்கமான போர் உக்தி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும். பயிற்சி ஒரு வாரத்தில் முழுமையாக நிறைவு பெற்றுவிடும். ஏற்கெனவே சில படைகள் திரும்பி வருகின்றன என்று ரஷ்யா கூறியுள்ளது.

ஆனால் அமெரிக்கா இதனை மறுக்கிறது. இவ்விவகாரத்தில் ரஷ்யா பொய் கூறி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷ்யா எந்தநேரத்திலும் தாக்குதலை தொடங்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜோ பைன் கூறியதாவது:

உக்ரைனைத் தாக்க ரஷ்யா உத்தேசித்துள்ளது. இதனை நம்புவதற்கு எங்களுக்குக் காரணம் இருக்கிறது. அவர்கள் உக்ரைனின் தலைநகரான கியேவை குறிவைத்துள்ளார்கள். நாங்கள் மீண்டும் மீண்டும் ரஷ்யாவின் திட்டங்களை உரக்கக் கூறுகிறோம். நாங்கள் ஒரு மோதலை விரும்பவில்லை. ஆனால் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. உக்ரைன் மீது படையெடுப்பதை நியாயப்படுத்தவும், தங்கள் படையை நகர்த்தவும் ரஷ்யா தீவிரமாகி வருகிறது. ஆனால் அதனை தடுக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.

உக்ரைனுக்குள் படையெடுப்பதற்கு ஒரு காரணத்தை உருவாக்க ரஷ்ய தவறான தகவல்களை தொடர்ந்து கூறி வருகிறது. பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸில் உக்ரைன் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா தனது மக்களுக்கு தவறான செய்திகளை பரப்பி வருகிறது. இதில் எந்த ஆதாரமும் இல்லை. அந்த கருத்து என்பத ரஷ்யா இதுவரை கூறி வரும் வாக்குறுதியை மீறுவதாகவே உள்ளன.

இவை அனைத்தும் ரஷ்யர்கள் முன்பு பயன்படுத்திய பிளேபுக்குடன் ஒத்துப்போகின்றன. அமெரிக்காவும் நட்பு நாடுகளும் அதன் கூட்டாளிகளும் பல வாரங்களாக எச்சரித்து வரும் அம்சங்களை இது உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.

கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறப்பட்டதை முன்பே கூறினோம். உக்ரைன் மீது படையெடுப்பு நடந்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து மீண்டும் ரஷ்யா உணர்ந்து செயல்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு இன்னமும் தாமதமாகவில்லை.

இதன் முக்கிய அம்சம் இதுதான். அமெரிக்காவும் நமது நட்பு நாடுகளும் கூட்டாளிகளும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவளிப்பார்கள். ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் சரியான பதில் தருவோம். மேற்கு நாடுகள் ஒன்றிணைந்து தீர்க்கப்பட்டுள்ளன. ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேசமயம் எங்கள் படைகளை அனுப்ப மாட்டோம். பெரும் சிக்கலில் உள்ள உக்ரைன் மக்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

ரஷ்யா இன்னும் ராஜதந்திரத்தை தேர்ந்தெடுக்க முடியும். இது தீவிரத்தை குறைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதற்கு தாமதமாகவில்லை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும் பிப்ரவரி 24 அன்று ஐரோப்பாவில் சந்திக்க வேண்டும் என்று ரஷ்யா ஒப்புக்கொண்டதை மீண்டும் நியாபகப்படுத்துகிறேன்.

ஆனால் அந்தத் தேதிக்கு முன்னதாக ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்தால், அவர்கள் ராஜதந்திரத்தின் கதவை சாத்திவிட்டார்கள் என்பது தெளிவாகிவிடும். அவர்கள் போரைத் தேர்ந்தெடுத்தால் அதற்கான உரிய விலையைக் கொடுப்பார்கள். நாங்களும் எங்கள் கூட்டாளிகளும் ரஷ்யா மீது விதிக்கும் பொருளாதாரத் தடைகளிலிருந்து மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளில் இருந்தும் பார்வை அவர்கள் மீது திரும்பும். இதனை ரஷ்யா உணர வேண்டும்.

இவ்வாறு பைடன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x