Published : 17 Feb 2022 02:06 PM
Last Updated : 17 Feb 2022 02:06 PM

பிரிட்டனில் டெல்டாக்ரான் பாதிப்பு கண்டுபிடிப்பு: கூர்ந்து கவனிப்பதாக சுகாதாரத் துறை தகவல்

லண்டன்: பிரிட்டனில் கரோனா வைரஸின் இன்னொரு திரிபான டெல்டாக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் கோவிட் 19 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் கரோனா உலகம் முழுவதும் பரவியது. கரோனா வைரஸ் பரவ ஆரம்பத்ததில் இருந்து அதன் உருமாற்றங்களை உலக சுகாதார நிறுவனம் ஆல்பா, பீட்டா, காமா, லாம்ப்டா, டெல்டா, ஒமைக்ரான் என பல்வேறு திரிபுகள் வந்துவிட்டன. இவற்றில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா திரிபு உலகளவில் பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய திரிபாக அறியப்படுகிறது. இதற்கு அடுத்து உருமாறிய B.1.1.529 என்ற மரபணு எண் கொண்ட ஒமைக்ரான் அதிகம் பரவும் தன்மை கொண்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் ஒமைக்ரான் அலைதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒமைக்ரானால் உயிர்ப் பலி, தீவிர நோய் பாதிப்பு உறுதி செய்யப்படாவிட்டாலும், இதன் பரவல் தன்மையால் ஒமைக்ரான் வைரஸ் கவலைக்குரிய திரிபாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது பிரிட்டனில் டெல்டாக்ரான் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 டிசம்பர் இறுதியில் சைப்ரஸ் நாட்டு மரபணு விஞ்ஞானிகள் டெல்டாக்ரான் பற்றி கூறினர்.

இது குறித்து சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை பேராசிரியர் லியோண்டியோஸ் காஸ்ட்ரிக்ஸ், "தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் என இரண்டு வைரஸ்களின் பாதிப்பும் உள்ளது. இந்த இரண்டு பாதிப்பும் இணைந்து இருப்பதை டெல்டாக்ரான் வைரஸ் என அழைக்கிறோம். இதில் ஒமைக்ரானின் மரபணு அடையாளங்களும், டெல்டா வைரஸின் மரபணுத் தொகுதியும் உள்ளன.

இந்த வகை டெல்டாக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 25 பேரைக் கண்டறிந்துள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் சூழலில் அனுமதியாகும் நோயாளிகள் மத்தியில்தான் இந்தப் பாதிப்பு தெரிகிறது. 25 பேரிடமும் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்வாப் மாதிரிகளை குளோபல் இன்ஃப்லுயன்ஸா சர்வைலன்ஸ் அண்ட் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்' (GISAID) என்ற அமைப்பின் ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம். இந்த வகை வைரஸ் வேகமாகப் பரவக்கூடியதா உள்ளிட்ட கூறுகளை இந்த அமைப்பு பகுப்பாய்வு செய்து தெரிவிக்கும்" என்று கூறியிருந்தார்.

ஆனால், சர்வதேச நாடுகள் பல, டெல்டாக்ரான் ஆய்வுக்கூட பிழையாக (லேப் எரர்) இருக்கலாம் என்று கூறினர். ஆனால் சைப்ரஸ் பேராசிரியரோ டெல்டாக்ரான் இருக்கிறது. இது நிச்சயமாக டெல்டா, ஒமைக்ரானின் ஹைப்ரிட் என்று வாதிட்டார்.

இந்நிலையில், பிரிட்டன் சுகாதாரத் துறை தற்போது, சில கரோனா மாதிரிகளில் டெல்டாக்ரான் தடம் தெரிவதாகக் கூறியுள்ளனர். இதனைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x