Published : 16 Feb 2022 09:19 AM
Last Updated : 16 Feb 2022 09:19 AM

மேற்கத்திய நாடுகளின் மனநோய் தீர மருத்துவ நிபுணர்கள் உதவி தேவை: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கிண்டல்

மாஸ்கோ: அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாட்டவருக்கு தேவையற்ற பயம் ஏற்பட்டுள்ளது. அவர்களது சித்தப்பிரம்மை தெளிய நிபுணர்கள் தேவையென கிண்டல் செய்துள்ளது ரஷ்யா.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. இதனால், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவ திட்டமிட்டுள்ள தாகவும் இதற்காக தனது படைகளை எல்லையில் குவித்துள்ள தாகவும் தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகின.

இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருந்து சில படைகள் முகாமுக்குத் திரும்புவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறும்போது, ‘‘உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்ட சில படைகள் தங்கள் பயிற்சியை முடித்த பின்னர் கிளம்புவதற்கு தயாராக உள்ளன. தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட ராணுவப்படையினர், தங்களது பணியை முடித்து விட்டு சாலை மற்றும் ரயில் மூலம் தங்களது முகாமுக்கு திரும்பி வருகின்றனர்’’ என்று தெரிவித்திருந்தார்.

உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய படைகள் திரும்பிவருகின்றன

சித்தப்பிரம்மை கிண்டல்.. இந்நிலையில், ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் துணைத் தூதர் டிமிட்ரி பொல்யான்ஸ்கி மேற்கத்திய நாடுகளை வெகுவாகக் கிண்டல் செய்துள்ளார். இது குறித்து டிமிட்ரி, "மேற்கத்திய நாட்டவருக்கு எல்லையில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக சித்தப்பிரம்மை ஏற்பட்டிருக்கிறது. எல்லையில் உள்ள ஒரு லட்சம் வீரர்கள் உக்ரைனைப் படையெடுக்க நிறுத்தப்பட்டதாக நினைத்துக் கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு நல்ல மருத்துவரின் உதவி தேவை என நினைக்கிறேன். எங்களின் படைகள் எங்கள் எல்லைக்குள் நிற்கின்றன. அவை எங்கள் நாட்டின் பலத்தைப் பிரதிபலிக்கின்றன. மற்றபடி அவை யாரையும் அச்சுறுத்த நிற்கவில்லை. எனக்கு படைகளின் எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் அது பற்றி உலகம் முழுவதும் ஊகங்கள் நிலவுகின்றன. பெலாரஸ் நாட்டுடனான வழக்கமான ராணுவ பயிற்சிக்காகவே படைகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சி இன்னும் ஒரு வார காலத்தில் முடிந்துவிடும் என நினைக்கிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x