Published : 15 Feb 2022 12:41 PM
Last Updated : 15 Feb 2022 12:41 PM

போர் பதற்றம்: உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்பட இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுரை

புதுடெல்லி: போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் வெளியேறலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் இணைந்தால், அது தங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்று குற்றம்சாட்டி உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது ரஷ்யா. அண்மையில் கிடைத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது.

அதிபரின் வீடியோவால் சர்ச்சை: உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1,30,000 வீரர்களை நிறுதியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர், பிப்ரவரி 16 ஆம் தேதியன்று ரஷ்யா நம் மீது படையெடுக்கும் என்று கூறியிருந்தார். இது உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

உக்ரைன் அதிபர்

நிலைமையை உணர்ந்த அதிபர் அலுவலகம் அவசரமாக ஓர் விளக்க அறிக்கையை வெளியிட்டது. அதில், அதிபர் பரவலாக செய்தியாளர்கள் கூறுவதைப் பற்றியே குறிப்பிட்டார் என்று தெரிவித்தது. இதனைவைத்து எதிர்க்கட்சிகள் அதிபரை விமர்சிக்கத் தொடங்கின. அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்னாள் காமெடி நடிகர் என்பதால் அதனுடன் தொடர்புபடுத்தி வழக்கம்போல் போரையும் கூட அதிபர் நகைச்சுவையாக்கிவிட்டார் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

பயண அறிவுரை வெளியிட்ட நாடுகள் எவை? - ரஷ்யா உக்ரைன் சர்ச்சை வலுத்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, தி நெதர்லாந்த்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான், ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் தங்கள் மக்களை உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளன. பெரும்பாலான நாடுகள் உக்ரைனில் தங்குவது அவசியமற்ற சூழலில் உள்ளவர்கள், மாணவர்கள் வெளியேறலாம் என்று வலியுறுத்தியுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

மத்திய அரசின் அறிவுரை: இது தொடர்பாக மத்திய அரசு, உக்ரைனில் தங்குவது அவசியமற்றது என்ற சூழலில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் அங்கிருந்து வெளியேறலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகி தங்களின் விவரங்களைப் பதிவு செய்யுமாறும், இதனால் தேவைப்படும்போது உரிய உதவிகளை செய்வது எளிதாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்கள்: படம் உதவி: வியோன் செய்தி தளம்.

உக்ரைனில் 20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து வருவதாகத் தெரிகிறது. உக்ரைனில் மருத்துவம் பயில இந்திய மாணவர்கள் அதிகம் விருப்பம் காட்டுகின்றனர், இதற்கு இரண்டு காரணங்கள் பிரதானமாக உள்ளன. ஒன்று கட்டணம், இரண்டாவது இங்கு பெறும் மருத்துவப் பட்டம் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் அங்கீகரிக்கப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைனின் டராஸ் ஷெவ்சென்கோ தேசிய பல்கலைக்கழகத்தில் (Taras Shevchenko National University.) பயிலும் இந்திய மாணவர் வியோன் நியூஸ் செய்தி ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில், "ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வருகிறது. நாங்கள் அடுத்து என்னவோ என்று எதிர்நோக்கியுள்ளோம்" என்றார்.

மற்றொரு மாணவர், "நான் இங்கு கல்வி பயில்வது இது மூன்றாவது ஆண்டு. நான் இங்கு வந்ததில் இருந்தே, போர் பற்றிய பேச்சு உள்ளது. ஆனால், இந்த முறை இந்தப் பேச்சு கொஞ்சம் உக்கிரமாக உள்ளது. போர் வரக்கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நிலைமை கணிக்க முடியாமல் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

அதே பல்கலைக்கழகத்தில் 4-ஆம் ஆண்டு மருத்துவம் பயிலும் மது மோகன், ”போர் வந்தால் நாங்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டும். இங்கு மருத்துவம் பயிலும் பலரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். போர் வந்தால் அது எங்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.அப்படி ஒரு நிர்பந்தம் வந்தால் நாங்கள் வெளியேறுவோம். ஆனால், இங்குள்ள எனது உக்ரைன் நண்பர்களுக்காக நான் வருந்துகிறேன்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x