Published : 11 Feb 2022 03:57 PM
Last Updated : 11 Feb 2022 03:57 PM
சிகாகோ: மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் நபரிடம் பிணைக்கைதியாக சிக்கிக் கொண்ட 80 வயது மூதாட்டியை அவரது குடும்பத்தினர் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளது, உலகப் புகழ் பெற்ற 'Wordle' வேர்டில் என்ற விளையாட்டு.
அது என்ன வேர்டில்? - இது ஒருவகை வார்த்தை விளையாட்டு. கடந்த ஆண்டு அக்டோபரில்தான் இது உலக அளவில் பிரபலமானது. ஓர் ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டின் சாராம்சம். சில கட்டங்களில் ஐந்தெழுத்து வார்த்தை மறைந்திருக்கும். இதை ஆறு வாய்ப்புகளில் கண்டுபிடிக்க வேண்டும். நாம் எழுதும் எழுத்து, கண்டுபிடிக்க வேண்டிய வார்த்தையில் சரியான கட்டத்தில் இருந்தால், அந்தக் கட்டம் பச்சையாக மாறும்; தவறான இடத்தில் இருந்தால் மஞ்சளாக மாறும். ஒருவேளை நாம் கண்டுபிடிக்க வேண்டிய வார்த்தைக்கு சற்றும் சம்பந்தமில்லாத எழுத்தாக இருந்தால் சாம்பல் வண்ணமாக மாறும். இந்த வார்த்தை விளையாட்டை இப்போது தினமும் உலகம் முழுதும் பலரும் கொண்டாடி விளையாடுகின்றனர்.
இச்செய்தியில் வரும் மூதாட்டியும் அவரது குடும்பத்தாரும் கூட குடும்பமாக வேர்டில் விளையாட்டை விளையாடுகின்றனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார் டெரைஸ் ஹோல்ட். 80 வயது மூதாட்டியான இவர் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ஜேம்ஸ் டேவிஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 32 வயது இளைஞர், அந்த மூதாட்டியின் வீட்டினுள் நுழைந்துள்ளார். ஜன்னலை உடைத்து அதன் வழியாக வீட்டினுள் ஆடைகள் இல்லாமல் நுழைந்த அவர் மேல் முழுவதும் கண்ணாடி கிழித்த காயங்கள் இருந்துள்ளன. அந்த நபருக்கு மனநல பாதிப்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றன. மூதாட்டி ஹோல்ட்டை கத்தரிக்கோல் முனையில் ’கொன்றுவிடுவேன்’ என டேவிஸ் அச்சுறுத்தியுள்ளார். பின்னர், அந்த மூதாட்டியை வீட்டின் தரைத்தளத்துக்கு மிரட்டி அழைத்துச் சென்று அங்கேயே சிறை வைத்தார். அன்றைய தினம் வழக்கம்போல் ஹோல்ட் அவரது மகள் கால்ட்வெல்லும் வேர்டில் ஸ்கோரை அனுப்பவில்லை. அடுத்த நாளான பிப்ரவரி 6-ஆம் தேதியும் ஹோல்ட் ஸ்கோர் அனுப்பவில்லை. மகளிடம் பேசவும் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த ஹோல்ட் கால்ட்வெல், சிகாகோ போலீஸாரை தொடர்பு கொண்டார். அவர்கள் புகாரின்படி மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது அவர் அங்கு பிணைக்கைதியாக இருப்பது தெரியவந்தது. போலீஸார் டேவிஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் டேவிஸ் ஒத்துவரவில்லை. பின்னர் அதிரடிப்படையினர் டேவிஸை தாக்கி அந்த மூதாட்டியை மீட்டனர். டேவிஸ் மீது வீடுகளில் நுழைதல், பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆட்கடத்தலில் ஈடுபடுதல் போன்ற குற்றங்கள் உள்ளன. அவரை போலீஸார் கைது செய்தனர்.
வேர்டில் ஸ்கோர் வராததை வைத்து தாய்க்கு ஏதோ பிரச்சினை என அறிந்துகொண்டதாக கால்டுவெல் கூறினார். மூதாட்டி டேவிஸ் கூறும்போது, ’’நான் உயிருடன் திரும்புவேன் என்று நினைக்கவில்லை. இப்படியான சம்பவங்கள் நடக்குமா என்று நான் யோசித்தது உண்டு. ஆனால் எனக்கே நடந்துள்ளது. இதிலிருந்து மீண்டது எனது அதிர்ஷ்டம்’’ என்று கூறியுள்ளார்.
வேர்டில் விளையாட்டை அறிமுகப்படுத்திய நியூயார்க் டைம்ஸ், வேர்டில் விளையாட்டை 7 இலக்க எண் கொண்ட தொகை கொடுத்து பெற்றதாகக் கூறியுள்ளது. மிகவும் சொற்ப தொகையைக் கொடுத்த நியூயார்க் டைம்ஸுக்கு இப்போது இந்த விளையாட்டால் விற்பனையில் அதீத லாபம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விளையாட்டை ஜோஷ் வார்ட்ளே என்ற மென்பொருள் பொறியாளர் உருவாக்கினார்.
விளையாட்டு விபரீதமாகும். இங்கு விபரீதம் விளையாட்டால் தடுக்கப்பட்டுள்ளது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment