Published : 10 Feb 2022 04:17 PM
Last Updated : 10 Feb 2022 04:17 PM
ஒட்டாவா: சாலை முற்றுகைகள், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் முதலானவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாலை முற்றுகைகள், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது நாட்டின் வணிகம் மற்றும் ஏற்றுமதியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். நாம் எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கரோனா தொற்றை, சாலைத் தடுப்புகளால் முடிவுக்கு கொண்டு வர முடியாது. அறிவியலால் மட்டுமே கரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வர முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
கனடா - அமெரிக்கா எல்லையில் அமைந்துள்ள பாலத்தில் போராட்டக்காரர்கள் நெடும் தூரத்திற்கு லாரிகளை நிறுத்தி வைத்துள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கனடா மற்றும் அமெரிக்க வர்த்தக தொழில் சங்கங்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபடும் லாரி ஓட்டுநர்கள் வன்முறைகளை நிறுத்திக் கொள்ளாமல் இருந்தால், அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
கனடாவில் பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களாக கனடாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கனடா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT