Published : 02 Feb 2022 03:22 PM
Last Updated : 02 Feb 2022 03:22 PM
பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மனைவி ரி சோல் ஜு, ஐந்து மாதங்களுக்குப் பின்னர் முதன்முறையாக பொதுவெளியில் தென்பட்டுள்ளார்.
கரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே வட கொரிய அதிபரின் குடும்பத்தினர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில், பொதுவெளியில் வருவதில்லை.
இந்நிலையில், வட கொரியாவின் புத்தாண்டை ஒட்டி தலைநகர் பியாங்யாங்கில் உள்ள மன்சுடே கலையரங்கில் நடைபெற்றக் கலை நிகழ்ச்சியைக் காண கணவர் கிம் ஜோங் உன்னுடன் வந்தார் ரி சோல் ஜு. இதனை வட கொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏவும் உறுதி செய்துள்ளது.
கடைசியாக இவர் கடந்த செப்டம்பர் 9, 2021ல், குமுசுசன் மாளிகைக்கு கணவருடன் சென்றார். அந்த மாளிகையில் கிம்மின் தந்தை, தாத்தா ஆகியோரின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று புத்தாண்டை ஒட்டி மன்சுடே கலையரங்கிற்கு கணவருடன் வந்த ரி சோல் ஜுவை மக்கள் ஆரவாரம் பொங்க வரவேற்றனர். பின்னர் கிம்மும் அவருடைய மனைவியும் அரங்கிலிருந்த கலைஞர்களுடன் கைகுலுக்கினர். அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கிம் ஜோங் உன்னின் தந்தைக்குப் பல தாரங்கள். ஆனால் அவர் வாழ்நாளில் ஒருமுறை கூட மனைவியுடன் பொது நிகழ்வுக்கு வந்ததில்லை. ஆனால் மாறாக கிம் ஜோங் உன்னின் மனைவி ரி, அவருடன் கலாச்சார, கலை நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாது ராணுவ நிகழ்வுகளுக்கும் உடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனாலேயே ரி சோல் உலகளவில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றார்.
கடந்த சில மாதங்களாக அவர் வெளியுலகிற்கு அவர் வராததால் அவர் கர்ப்பம் தரித்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இப்போது வெளியே வந்துள்ளார். கிம் ரி தம்பதிக்கு 3 குழந்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இல்லை.
திடீர் மாயமும் திருப்பி வருவதும் புதிதல்ல: வட கொரிய அதிபர் குடும்பத்தில் அவர் உட்பட முக்கியமானவர்கள் இப்படி திடீரென மாயமாவதும் பின்னர் திரும்பி வருவதும் புதிதல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இதய அறுவை சிகிச்சைக்குப்பின் உணர்வற்று, மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்க மருத்துவ வல்லுநர்கள் குழுவை சீனா அனுப்பி வைத்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.
கிம்முக்கு அதீதமான புகைப்பழக்கம், உடல் பருமன், உடல்சோர்வு உற்சாகமின்மை, அதிக தூக்கம் ஆகியவற்றால் அவதிப்பட்டார். இதனால் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் கிம்மின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சிஎன்என் சேனல் செய்தி வெளியி்ட்டது.
அதை எல்லாம் உறுதிப்படுத்துவது போலவே கிம் பல வாரங்கள் பல முக்கிய நிகழ்வுகளுக்குக் கூட தலை காட்டாமல் இருந்தார். அப்புறம் மீண்டும் அவர் தோன்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT