Published : 01 Feb 2022 02:19 PM
Last Updated : 01 Feb 2022 02:19 PM
வாஷிங்டன்: 'அமெரிக்காவின் அச்சுறுத்தலைக் கேட்டு நாங்கள் பின்வாங்கப் போவதில்லை' என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனின் எல்லையில் ரஷ்யா நிறுத்தியதால் ரஷ்யா - உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சித்தன. உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தால், ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று திங்கள்கிழமை அமெரிக்கா எச்சரித்தது.
அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள ரஷ்யா தூதரகம், அமெரிக்காவுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், “அமெரிக்காவின் அச்சுறுத்தலை கேட்டு நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எங்களது படை வீரர்கள் யாரையும் அச்சுறுத்துவதில்லை. எங்களது படைகளை அதன் எல்லைக்குள் நகர்த்துவது ரஷ்யாவின் இறையாண்மை உரிமை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக உரையாடினர். இந்த உரையாடல் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
ரஷ்யா - உக்ரைன் பதற்றம் ஏன்?
சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.
பொருளாதாரத்தில் வளரும் நாடு உக்ரைன். மனித ஆற்றல் வளர்ச்சியில் உலகத்தில் 74-வது இடத்தில் இருக்கிறது. வறுமையும் ஊழலும் அதிகம். வளமான விவசாய நிலம் இருப்பதால் வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கியமான நாடாகத் திகழ்கிறது. ராணுவ பலத்தில் ரஷ்யா, பிரான்சுக்கு அடுத்து வருகிறது. குடியரசு நாடு, அதிபர் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறை நிலவுகிறது. நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை, சட்டமியற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று முக்கிய உறுப்புகளைக் கொண்டிருக்கிறது. அதிபராக விளாடிமிர் ஜெலன்ஸ்கி. பிரதமராக டெனிஸ் ஷைமிஹால் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT