Published : 13 Apr 2016 09:46 AM
Last Updated : 13 Apr 2016 09:46 AM
மும்பை மற்றும் பாரீஸ் தாக்குதல் களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஆஸ்திரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தற் கொலைப்படைத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தாக்குதலை நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி உயிருடன் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிர வாதிகள் தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
தற்போது ஐரோப்பாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர் தாக் குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 13-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். 368 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 22-ம்தேதி பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் அகதிகள் முகாமில் தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த முகமது கனி உஸ்மான் (35), பெல்ஜியத்தை சேர்ந்த அடெல் ஹட்டாடி ஆகியோரை அந்நாட்டு போலீஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
இருவரும் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் பாரீஸ் தாக்குதலை நடத்த வெடிகுண்டு களை தயாரித்த தீவிரவாதிகள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவர்களில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது கனி உஸ்மான் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 2008 மும்பை தாக்குதலுக்காக அவர் வெடி குண்டுகளை தயாரித்துள்ளார். தற்போது ஐரோப்பாவில் அகதி யாக நுழைந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் பெரும் சதித்திட்டங்கள் முறியடிக் கப்பட்டுள்ளன என்று ஆஸ்திரிய போலீஸ் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
மும்பை, பாரீஸ் தாக்குதல்கள் ஒரே பாணியில் நடத்தப்பட்டதை ஆஸ்திரிய புலனாய்வு அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். கடந்த 2008-ல் பாகிஸ்தானில் இருந்து மும்பைக்குள் ஊடுருவிய தீவிர வாதிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்தினர். இதே போல அகதிகள் போர்வையில் பாரீஸுக்குள் ஊடுருவிய தீவிர வாதிகள் பல குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்தினர். இது மிக முக்கிய துப்பு என்று ஆஸ்திரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.
எனினும் ஆஸ்திரிய அரசு சார்பில் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை. இதனிடையே முகமது கனி உஸ்மான் யார் என்பதே எங்களுக்கு தெரியாது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச் சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT