Published : 16 Apr 2016 03:50 PM
Last Updated : 16 Apr 2016 03:50 PM
தெற்கு ஜப்பானில் சனிக்கிழமை காலை ரிக்டர் அளவில் 7.3 என்று பதிவான 2-வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. கையூஷுவில் ஏற்பட்ட 6.5 நிலநடுக்கத்தையடுத்து இது ஏற்பட்டுள்ளது.
குமாமோட்டோவை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் சேதங்கள் அதிகம் ஏற்பட்டுளன. கியூஷூ பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. இந்த 2-ம் நிலநடுக்கத்திற்கு குறைந்தது 10 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜப்பானின் தென்மேற்கு தீவுப் பகுதியான கையூஷுவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 9 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பெரிய கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
தற்போது இந்த இரண்டு நிலநடுக்கங்களினால் மஷிகி பகுதியில் வீடுகள் மற்றும் கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாக வந்த தகவல்களின் அடிப்படையில் மீட்புப் படையினர் அனுப்பப் பட்டுள்ளனர்.
மஷிகியில் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கடியில் சுமார் 66 பேர் சிக்கியுள்ளதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
மேலும், பூகம்பத்தில் காயமடைந்த 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆனால் காயங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை அல்ல என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. பூகம்ப மையமான குமாமோட்டோவில் பெரிய கட்டிடங்களும் இடிந்தன என்று ஏஜென்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வுக்கு தொடர்பில்லாத வகையில், குமாமோட்டோவுக்கு அருகில் உள்ள எரிமலை ஒன்றும் வெடித்து அதிலிருந்து சாம்பல் புகை கிளம்பியுள்ளதால் அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்படும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் யட்சுசிரோ பகுதியில் பூகம்பத்தினால் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பிடிக்க ஒருவர் பலியானார். தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை. குமாமோட்டோ விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் விமான நிலையம் மூடப்பட்டது.
அதாவது வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் இதற்கு ஒரு முன்னோடி, இதுதான் பயங்கர நிலநடுக்கம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
வியாழனன்று ஏற்பட்ட நிலநடுக்கப் பாதிப்பினால் சுமார் 44,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் துரித கதியில் நடக்க உயர் மட்ட கூட்டத்தைக் கூட்டி உத்தரவிட்டுள்ளார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT