Published : 28 Jan 2022 03:27 PM
Last Updated : 28 Jan 2022 03:27 PM
அமெரிக்காவின் புளோரிடா நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேலே தனி ஆளாக அமர்ந்து வந்த இளைஞரின் புகைப்படம், உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவி, மனதை உலுக்கி வருகிறது. அந்தப் புகைப்படத்திலிருந்தவர் கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயது இளைஞரான ஜுவான் ஸ்டிபன் மோண்டோயா. இந்தப் பயணத்தின் பின்புலமும் வலி மிகுந்தது.
விபத்துக்குள்ளான படகில் பல மணி நேரமாக நடுக்கடலில் பயணித்து வந்த ஜுவான், அமெரிக்க கடற்படையால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டபோது, அவரது உடலில் இருந்த அனைத்து நீர்ச்சத்தும் இழந்து மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். உடனடியாக ஜுவானுக்கு அமெரிக்க கடற்படை தண்ணீரும் உணவும் அளித்து அவரை மீட்டனர்.
என்ன நடந்தது? - கரிபீயன் தீவுகளில் உள்ள பஹாமஸிலிருந்து, ஞாயிறு அதிகாலை ஜுவான் உட்பட 40 பேர் அமெரிக்காவுக்கு கடல்வழியாக பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் பயணம் செய்த படகு அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. படகில் பயணித்த 40 பேரில் ஜூவான் மட்டுமே மீண்டு வந்திருக்கிறார். படகில் வந்த யாரும் உயிர் காக்கும் கவசம் அணிந்திருக்கவில்லை. இந்த விபத்தில் ஜுவானின் தங்கை உட்பட அனைவரும் கடலில் மாயமாகி உள்ளனர்.
மோசமான வானிலை காரணமாகவே படகு விபத்துக்குள்ளானது என்றும், இதுவரை 5 பேரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. ஆள்கடத்தல் கும்பல் இந்தப் படகில் பயணித்திருக்கலாம் என்றும் அமெரிக்க கடற்படை சந்தேகம் தெரிவித்துள்ளது.
புலம்பெயரும் மக்களின் துயரம்: அமெரிக்கா சென்றுவிட்டால் வறுமையிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணத்தில் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும், ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களும் கடல் வழியாக சட்டத்துக்கு புறப்பாக பயணங்களை மேற்கொள்கின்றனர். அவ்வாறு வரும் மக்களின் படகு, கடலில் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவது கடந்த சில ஆண்டுளாக அதிகரித்து வருகிறது.
புலம்பெயரும் மக்களின் துயரம் மிகு பயணங்களை நிறைய கேட்டிருந்தாலும் ஜூவானின் இந்தப் புகைப்படம் அவர்களின் வலியை நேரடியாக உணர்த்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT