Published : 23 Jan 2022 06:45 PM
Last Updated : 23 Jan 2022 06:45 PM

கரோனா விதிமுறைகளால் திருமணத்தை ரத்து செய்தார் நியூஸிலாந்து பிரதமர் 

வெலிங்டன்: நியூஸிலாந்தில் அண்மைக்காலமாக ஒமைக்ரான் தொற்று பெருகி வரும் சூழலில் தனது திருமணத்தை தற்போதைக்கு ரத்து செய்வதாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆல்ட்ரென் அறிவித்துள்ளார்.

40 வயதான ஜெசிந்தா கடந்த 4 ஆண்டுகளாக அந்நாட்டின் பிரதமராக உள்ளார். கரோனா முதல் அலையின் போது உலகளவில் முதல் நாடாக ஜீரோ கோவிட் என்ற இலக்கை நியூஸிலாந்து எட்டியது. இதற்காக அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

இந்நிலையில் தற்போது நியூஸிலாந்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 9 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கெடுபிடிகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ள ஜெசிந்தா, "நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளோருக்காக நான் வருந்துகிறேன். டெல்டாவைவிட அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டுள்ளது ஒமைக்ரான். பொது இடங்களில் கூட்டம் கூட தடை விதித்துள்ளோம்.

முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளோம். அடுத்த மாத இறுதி வரையிலாவது இந்த கெடுபிடிகள் அமலில் இருக்கும். ஆகையால் நான் எனது திருமணத்தை இப்போதைக்கு ரத்து செய்கிறேன். நாட்டின் சாமான்ய குடிமக்களில் இருந்து நான் எவ்விதத்திலும் மாறுபட்டவர் இல்லையே. இந்த பெருந்தொற்று நிறைய உறவுகளைப் பிரித்து வைத்துள்ளது. அவர்களுக்காக நான் வருந்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்று தொடங்கிய நாள் தொட்டு இதுவரை அந்நாட்டில் 15,104 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x