Published : 21 Jan 2022 01:20 PM
Last Updated : 21 Jan 2022 01:20 PM
உலக அளவில் மக்களை வறுமையிலிருந்து மீட்க எங்களுக்கு அதிக வரி விதியுங்கள் என்று 100க்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை விடுத்த கோடீஸ்வரர்களில் டிஸ்னி ஹெய்ரிஸ், அபிகெயில் டிஸ்னி ஆகியோரும் உள்ளனர்.
ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலகப் பொருளாதார மாநாடு இந்த வாரம் நடந்தது. இதில் புதன்கிழமை சர்வதேச கோடீஸ்வரர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்டு பேசினர். இதில் 102 கோடீஸ்வரர்கள் சார்பில் கடிதம் வெளியிடப்பட்டது.
அதில், “வரிமுறை சரியாக இல்லை என்று எங்களுக்குத் தெரியும். கடந்த இரண்டு வருடங்களாக இந்த உலகம் தீராத துன்பத்தில் இருந்து வருகிறது. இந்தத் தொற்றுக் காலங்களில் உண்மையில் எங்களது செல்வம் உயர்வதைக் கண்டோம். பணக்காரரர்களிடம் செல்வம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
அதேசமயம் வறுமையும், பொருளாதார ஏற்றத்தாழ்வும் உலக அளவில் அதிகரித்துள்ளன. இதற்கு தற்போதைய வரிவிதிப்பு முறை நியாயமாக இல்லாததே காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். செல்வந்தர்களிடம் பணம் மேலும் உயர்கின்றது. எனவே எங்களைப் போன்ற பெருங்கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒவ்வொரு நாடும், கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி விதிப்பதன் வாயிலாக ஓராண்டில் 189 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும். இத்தொகை உலக மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தவும், 230 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்கவும் உதவும்” என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன், நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT