Published : 19 Jan 2022 07:04 PM
Last Updated : 19 Jan 2022 07:04 PM
மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு சுமார் 40 கோடி N95 முகக்கவசங்கள் இலவசமாகக் கிடைக்கும் திட்டத்தை அதிபர் ஜோ பைடன் அறிமுகப்படுத்த உள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாகவே ஒமைக்ரான் காரணமாக கரோனா தொற்று தீவிர நிலையை அடைந்துள்ளது. நேற்று மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,702 பேர் பலியாகி உள்ளனர். 6 6 கோடிக்கு அதிகமானவர்கள் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் இலவசமாகக் கிடைக்கச் செய்யும் திட்டத்தை அதிபர் ஜோ பைடன் இன்று அறிமுகம் செய்கிறார். இத்திட்டத்தின்படி சுமார் 40 கோடி N95 முகக்கவசங்கள் மருந்தகங்கள் மூலமும், பொது சுகாதார நிலையங்கள் மூலமும் பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்க உள்ளன.
பிப்ரவரி மாதத் தொடக்கம் முதல் பொதுமக்கள் முகக்கவசங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் முகக்கவசம் முக்கியமான ஒன்று என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
2019 டிசம்பரில் சீனாவின் வூஹானின் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா , 2020 தொடங்கியவுடனேயே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளைக் கடந்த பிறகும் கரோனா முடிவுக்கு வரவில்லை.
தடுப்பூசியால் கரோனாவின் தீவிரத் தன்மை உலக அளவில் குறைந்தாலும், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கரோனா தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் கரோனா முடிவுக்கு வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT