Published : 20 Apr 2016 06:14 PM
Last Updated : 20 Apr 2016 06:14 PM
பூமியின் சராசரி வெப்பநிலை கடந்த மார்ச் மாதத்தில் 1.07 டிகிரி செல்சியஸ் அதிகரித்து, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது மிகவும் ‘அதிர்ச்சிகரமானது’ என்று வர்ணித்த இந்த அறிக்கை இது ‘ஒரு வகையான பருவ நெருக்கடி நிலை’ என்றும் எச்சரித்துள்ளது.
20-ம் நூற்றாண்டு சராசரியுடன் ஒப்புநோக்குகையில், உலகம் முழுதும் மார்ச் மாதம் 1.07 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.04 டிகிரி செல்சியஸ். ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் அளவுகள் 1891-ம் ஆண்டு முதல் ஆராயப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று நாசா வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த 1951-1980-ம் ஆண்டுகளின் சராசரி வெப்பநிலையை ஒப்பிடும்போது கடந்த மார்ச் மாதத்தில் 1.28 டிகிரி செல்சியஸ் அதிக வெப்ப நிலை தாக்கியுள்ளது என்று கூறுகிறது. இந்தத் தரவுகளின் படி பிப்ரவரி மாதம் 1.34 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்ப நிலை அதிகரித்துள்ளது.
ஐநா வானிலை மற்றும் தட்பவெப்ப நிலை அமைப்பான உலக வானிலை அமைப்பு கடந்த மார்ச் மாத வெப்பநிலை அதிகரிப்பு கடந்த 100 ஆண்டுகால அதிகரிப்பை உடைத்துள்ளது.
ஏற்கெனவே 2014-ம் ஆண்டு இருந்த பூமியின் வெப்ப நிலை அளவை 2015-ம் ஆண்டு முறியடித்து அதிகரித்துள்ளது. தற்போது இந்தத் தகவல்களின் படி தொடர்ந்து 3-வது ஆண்டாக சராசரி வெப்ப நிலை அதிகரித்துள்ளது.
1998-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் எல் நினோ விளைவு தாக்கம் செலுத்தியதில் இந்த வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், நாடுகளின் தொழிற்துறை உற்பத்தி நடவடிக்கைகளினால் வெளியேறும் கரியமிலவாயுவின் அதிகரிப்பினால்தன் வெப்ப நிலை பெரும்பாலும் உயர்கிறது என்று விஞ்ஞானிகள் எல் நினோவை ஒரு சிறு தாக்கமே என்று கூறுகின்றனர்.
பிரிட்டன் வானிலை ஆய்வு மைய பேராசிரியர் ஆடம் ஸ்கைஃப் கூறும்போது, “எல் நினோ விளைவு தற்போது குறைந்து வருகிறது, ஆனால் கடல்களில் இதன் தாக்கம் ஏற்பட கொஞ்சம் தாமதமாக விளைவாக வரும் சில மாதங்கலில் உலக வெப்ப நிலை கடுமையாக உயரும், வானிலை மாற்றம் காரணமாக உலக வெப்ப நிலை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கவே செய்யும். ஆனால் எல்நினோ இந்த ஆண்டு இறுதியில் முடிந்து விடும்” என்றார்.
பூமியின் சராசரி வெப்ப அளவு அதிகரிப்பிற்கும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்குமான தொடர்புகளை ஏற்கெனவே விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT