Published : 17 Jan 2022 05:34 PM
Last Updated : 17 Jan 2022 05:34 PM
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி என்ற அமைப்பு ட்ரோன் மூலம் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மூவரில் இருவர் இந்தியர்கள் எனவும், ஒருவர் பாகிஸ்தானியர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அபுதாபி விமான நிலையம் அருகே உள்ள முசாஃபா பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனமான ADNOCல் தான் இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில், 3 ஆயில் டாங்கர்கள் தீப்பற்றி வெடித்துச் சிதறின. ஆரம்பத்தில் இது விபத்து என்று நினைக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட விசாரணையில் ட்ரோன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது. சில மணித்துணிகளில் ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பான ஹவுத்தி இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய சவூதி தலைமையிலான கூட்டணியை எதிர்த்து செயல்படும் அமைப்பாக இந்த ஹவுத்தி அமைப்பு அறியப்பட்டு வருகிறது. சவூதி அரேபியா மீது ஹவுத்தி அமைப்பு பலமுறை எல்லை தாண்டிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தப்போவதாகக் கடந்த காலங்களில் பல முறை இந்த அமைப்பு அச்சுறுத்திவந்த நிலையில், இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக, அபுதாபி விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியது. தற்போது தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணையை ஐக்கிய அரபு அமீரகம் தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT