Published : 15 Jan 2022 07:15 AM
Last Updated : 15 Jan 2022 07:15 AM

மீண்டும் ஜோக்கோவிச் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலியா: கொந்தளிப்பில் ரசிகர்கள்

மெல்போர்ன்: டென்னிஸ் நட்சத்திரமும் 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவாக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக ரத்து செய்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், ஆஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி செர்பியா டென்னிஸ் வீரர் நோவா ஜோக்கோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு கடந்த 6 ஆம் தேதி ரத்து செய்தது. இதனால் அவர் விமான நிலையத்திலிருந்து தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டார். மெல்போர்ன் விமான நிலையம் அருகே உள்ள விடுதியில் தனிமைப்படுத்தி வைத்தனர். ஆனால் நாடு திரும்ப மறுத்த செர்பிய வீரர் ஜோகோவிச் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

சட்டப் போராட்டாத்தில் வெற்றி: ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். அப்போது, ஜோகோவிச் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த மாதம் ஜோகோவிச் கரோனாவால் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதால் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதாரம் தேவையில்லை. 6 மாதங்களுக்குள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி விதியில் இருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்படலாம் என்று ஆஸ்திரேலிய மருத்துவ அதிகாரிகள் உறுதி கொடுத்துள்ளதாகவும்" தெரிவித்தார்.

இதனையடுத்து, நீதிபதி அந்தோணி கெல்லி அளித்தத் தீர்ப்பில், "ஓட்டலில் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ள ஜோகோவிச்சை 30 நிமிடங்களில் விடுவிக்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து ஜோக்கோவிச் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

இந்நிலையில் வேறு காரணங்களைக் கூறி ஆஸ்திரேலியா இரண்டாவது முறையாக ஜோக்கோவிச்சின் விசாவை ரத்து செய்துள்ளது.

காரணம் இதுதான்: இந்த முறை ஆஸ்திரேலியா வேறு ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு அவரது விசாவை ரத்து செய்துள்ளது. ஜோக்கோவிச் தடுப்பூசிக்கு எதிரான கொள்கை கொண்டவர். அவர் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்கியிருந்தால் தடுப்பூசிக்கு எதிரான சில மக்களின் மனநிலை வலுப்பெறும். இதனால் உள்நாட்டு அமைதிக்குக் குந்தகம் உண்டாகும் என்று குடியேற்றத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தெரிவித்துள்ளார். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஜோக்கோவிச் குடியேற்றத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கை ஜோக்கோவிச் ரசிகர்களை கடும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x