Last Updated : 11 Jan, 2022 05:54 PM

46  

Published : 11 Jan 2022 05:54 PM
Last Updated : 11 Jan 2022 05:54 PM

பொருளாதார வீழ்ச்சியால் கலங்கி நிற்கும் இலங்கை; கைப்பற்றத் துடிக்கும் சீனா: இந்தியாவுக்கு தாக்கம் என்ன?

உணவுப்பொருட்கள் வாங்க வரிசையில் நிற்கும் இலங்கை மக்கள்

மஞ்சள் ரூ.350 (இலங்கை பணமதிப்பு), கத்தரிக்காய் 250 கிராம் ரூ.300, உளுந்தம் பருப்பு கிலோ ரூ.2000, தேங்காய் ஒன்று ரூ.150 வருமானம் உயரவில்லை. விண்ணை முட்டும் விலை, வறுமை, உணவுப் பஞ்சம் இதை நோக்கித்தான் இலங்கை பொருளாதாரத்தின் நிலை இருக்கிறது.

கம்பராமாயணம் தொட்டு அல்ல இன்று வரை அழகைக் கொட்டி உருவாக்கப்பட்ட குட்டி தேசம் இலங்கை. 4 பக்கம் கடல்கள், மலையகத் தோட்டங்கள், பசுங்காடுகள் எனச் செழுமையான நாடு.

ஆனால், உள்நாட்டுக் குழப்பம், போர் என பாதிக்காலம் போன நிலையில், இன்று பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவித்து, சீனாவிடம் அடகுவைக்கும் நிலைக்கு இலங்கை சென்றுவிட்டது.

இலங்கையில் என்னதான் பிரச்சினை?

இலங்கையின் பொருளாதாரத்தில் 10 சதவீதம் ஜிடிபி சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கிறது, அதன்பின் தேயிலை, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. ஆயத்த ஆடைகள், தேயிலை ஏற்றுமதி, சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றைச் சார்ந்துதான் இலங்கைப் பொருளாதாரமே இயங்கிக் கொண்டிருக்கிறது. மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்கு 52 சதவீதமாகவும், தேயிலை ஏற்றுமதி 17 சதவீதமாகவும் இருக்கிறது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பள்ளத்தை ஏற்படுத்தியது, சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

பொருளாதாரச் சரிவு

2019ஆம் ஆண்டின் 2-ம் காலாண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1 சதவீதமாக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்று மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

சுற்றுலாத்துறை முடக்கம் மற்றும் தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி சரிவால் அந்நியச் செலாவணி கையிருப்பும் வறண்டது. இலங்கையின் பொருளாதார நசிவைப் பார்த்த பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் மூலதனத்தைச் சுருட்டிக் கொண்டு வெளியேறத் தொடங்கின.

தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள் “குன்று தங்கம் இருந்தாலும் குந்தித் தின்றால் தாங்காது” என்பதுபோல வளர்ச்சிக்கு வழிதேடாமல் இலங்கை அரசு கைவசம் இருந்த அந்நியச் செலாவணி முழுவதையும் கரைத்துவிட்டது.

திவால் நிலை?

2021, நவம்பர் நிலவரப்படி இலங்கை அரசிடம் 160 கோடி அமெரிக்க டாலர்தான் அந்நியச் செலாவணி கையிருப்பாக அடுத்த 12 மாதங்களுக்கு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டுக் கடனாக இலங்கை அரசும், தனியார் துறையும் 730 கோடி டாலர் செலுத்த வேண்டும், இதில் 500 கோடி டாலர் சர்வதேசக் கடன் பத்திரங்களாக இருக்கின்றன. இந்தக் கடனை 2022, ஜனவரிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசு இப்போது சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் திடீரென கரோனா மூலம் வந்தவை என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது ராஜபக்ச அரசு.

10 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்

கொழும்பு கெசட் நாளேட்டில் சுஹைல் கப்தில் என்ற பொருளாதார வல்லுநர் ஆய்வறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை அரசு இருவிதமான பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. ஒன்று வர்த்தகப் பற்றாக்குறை, 2-வதாக நிதிப் பற்றாக்குறை.

கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே இலங்கை அரசின் சர்வதேசக் கடன் அதிகரித்து வருகிறது, 2019-ம் ஆண்டில் சர்வதேசக் கடன் 42.6 சதவீதமாக ஜிடிபியில் அதிகரித்துவிட்டது. டாலரின் மதிப்பில் கூறினால் 2019-ம் ஆண்டில் இலங்கையின் சர்வதேசக் கடன் 3,300 கோடி டாலராகும்.

இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மேலும் மேலும் கடனை வாங்கியும், உள்நாட்டில் அதிகமான பணத்தை அச்சடித்து வெளியிட்டதாலும் மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவை இலங்கை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாகவே சர்வதேச ரேட்டிங் நிறுவனங்களான ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்ஸ், மூடிஸ், பிட்ச் ஆகியவை இலங்கையின் சர்வதேசக் கடன் தரத்தை பியிலிருந்து சிக்கு இறக்கிவிட்டனர். இதனால் சர்வதேச அளவில் கடன் பத்திரங்கள் மூலம் கடன் பெறுவது இலங்கைக்குக் கடினமாகி திவால் நிலைக்குச் செல்லும்.

சீனாவுக்கான கடன்

இலங்கைக்கு இருக்கும் மிகப்பெரிய அளவிலான வெளிநாட்டுக் கடனில் பெரும்பகுதி சீனாவுக்குச் செலுத்த வேண்டியவை. சீனாவுக்கு மட்டும் இலங்கை 500 கோடி டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 100 கோடி டாலர் கடனும் இலங்கை வாங்கி அதனை தவணை முறையில் செலுத்த முடிவு செய்துள்ளது.

ஆனால், இலங்கை அரசிடம் இப்போது இருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு இந்த மாதத்தோடு முடிந்துவிடும். அடுத்துவரும் செலவுகளைச் சமாளிக்க குறைந்தபட்சம் 43.70 கோடி டாலராவது தேவைப்படும். 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான வெளிநாட்டுக் கடன் சேவையில் 480 கோடியை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது மிகப்பெரிய பிரச்சினையாகும்.

பணவீக்கம், விலைவாசி உயர்வு

2019-ம் ஆண்டு 750 கோடி அந்நியச் செலாவணி கையிருப்பு வைத்திருந்த இலங்கை 2021 ஜூலை மாதம் 280 கோடியாகக் குறைந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்தது, இறக்குமதிக்காகவும் அந்நியச் செலாவணி அதிகமாக செலவிடப்பட்டது. அந்நியச் செலாவணி குறைந்ததால், இலங்கை பணத்தின் மதிப்பும் குறைந்தது, கடந்த ஆண்டில் மட்டும் 8 சதவீதம் சரிந்துள்ளது.

பணத்தின் மதிப்பு குறைந்ததால், ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.250, சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 உளுந்து கிலோ ரூ.2,000 ஆகவும் வரையிலும் விற்கப்படுகிறது.

இதனால், அடிப்படை உணவு சப்ளையைக்கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து நிறைவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றுவிட்டன. நாட்டில் பணவீக்கத்தின் அளவு இதுவரை கண்டிராத அளவு 11.1 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

உணவுப்பொருள் விலை ஏற்றத்துக்கு யார் காரணம்?

இலங்கையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, வெங்காயம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. கேஸ் அடுப்பில் சமைத்தவர்கள் மண்ணெண்ணெய் அடுப்புக்கும், மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்த மக்கள் விறகு அடுப்புக்கும் மாறிவிட்டார்கள். 3 வேளை சாப்பிட்ட மக்கள் 2 வேளைக்கும், 2 வேளை சாப்பிட்ட மக்கள் ஒருவேளைக்கும் மாறிவருகிறார்கள்.

இலங்கையில் மிகப்பெரிய அளவுக்கு உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட கோத்தபய ராஜகபக்ச அறிவிப்புதான் காரணம். இலங்கையில் செயற்கை உரத்தைத் தடை செய்து, இயற்கை விவசாயத்துக்கு 100 சதவீதம் மாற வேண்டும் என்ற அறிவிப்பு மோசமான விளைவைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியது.

பொருளாதாரப் பேரழிவை மக்களிடம் மறைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசு பொருளாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ராணுவம் ஈடுபடுத்தப்படுகிறது.

ரேஷனில் உணவுப் பொருட்களை வாங்கவும், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகளில் பொருட்களை வாங்கவும் மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் அதிபர் கோத்தபய ராஜகபக்சவின் அறிவிப்புதான். உலகிலேயே இயற்கை வழி, பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்பும் நாடு இலங்கை என்று திடீரென அறிவித்து ரசாயன உரங்களுக்கும், பூச்சி மருந்துகளுக்கும் திடீரென தடை விதித்தார்.

திட்டமிடாத பாரம்பரிய விவசாயம்

பாரம்பரிய விவசாய முறையைப் பற்றி அதிகம் தெரியாத விவசாயிகள், அதற்கு முழுமையாகத் தயாராகாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனால், இயல்பாக வர வேண்டிய உணவு உற்பத்தி கூட வராமல் பற்றாக்குறையாக இருந்தது.

இந்தப் பற்றாக்குறை உணவு உற்பத்தியை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இலங்கை அரசு சென்றுவிட்டது. இலங்கையில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, விலைவாசி கண்டமேனிக்கு எகிறிவிட்டது.

5 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ்

இலங்கை ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் டபிள்யுஏ விஜேவர்த்தனா எச்சரிக்கையில், “பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் மக்களின் நிலைமை இன்னும் மோசமாகும். கரோனா பெருந்தொற்றிலிருந்து இலங்கையில் 5 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழ் சென்றிருக்கிறார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால், இலங்கை அரசு நீண்ட காலத்துக்குத் தீர்வு காணாமல் தற்காலிகமாகத் தீர்வை நோக்கியே நகர்கிறது. நிவாரணப் பொருட்களை இந்தியாவிடம் பெறுகிறது. கரன்ஸி ஸ்வாப்பிங் மூலம் இந்தியா, வங்கதேசம், சீனாவிடம் இருந்து பொருட்களை வாங்குகிறது, ஓமனிலிருந்து பெட்ரோலை வாங்குகிறது. கடந்த காலத்தில் பெற்ற கச்சா எண்ணெய் கடனை அடைக்க, ஈரான் நாட்டுக்கு மாதந்தோறும் 50 லட்சம் டாலர் மதிப்புள்ள தேயிலையை ஏற்றுமதி செய்து கடனை அடைக்கும் நிலைதான் நிலவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அரசின் பதில் என்ன?

இலங்கையில் உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் பதுக்கல்தான், விலை உயரும் என்ற எண்ணத்துடன் பதுக்கி வருகிறார்கள் என்று பழியைப் போடும் இலங்கை அரசு தங்களின் தவறை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

ராணுவம் களத்தில் இறக்கி பதுக்கல் பொருட்களை வெளிக்கொண்டு வந்து, மக்களுக்கு நியமான விலையில் வழங்கிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்நியச் செலாவணியை அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போதுள்ள சூழலில் இயற்கை முறை விவசாயம் சரிபட்டு வராது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தபோதிலும் இலங்கை அரசு பிடிவாதமாகக் கைவிட மறுக்கிறது. குறைந்த காலத்துக்கு சிரமமாக இருக்கும், நீண்டகாலத்தில் பலன் அளிக்கும் என்று இயற்கை விவசாயத்தைக் கைவிட மறுக்கிறது.

விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை மானிய விலையில் வழங்க அரசு தயாராக இருக்கிறது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆகவே பிரச்சினையின் ஒட்டுமொத்த உருவத்தையும் பார்க்கவும், தீர்க்கவும் இலங்கை அரசு தயாராக இல்லை

அதில் உச்சகட்டமாக, “மக்கள் அனைவருக்கும் உணவுப் பொருட்களை அரசே ஏற்பாடு செய்ய இயலாது; ஆகையால், வீட்டுத் தோட்ட முறைக்கு மக்கள் மாற வேண்டும்; முடிந்த அளவிற்கு வெளியிலிருந்து பொருட்கள் வாங்குவதைக் கைவிட்டு, உணவுத் தேவையை தாமாகவே நிறைவு செய்துகொள்ள வேண்டும்’’ என்று இலங்கை அரசு மக்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளது.

சீனாவின் பிடிக்குள் இலங்கை

இலங்கைக்கு இருக்கும் மிகப்பெரிய அளவிலான வெளிநாட்டுக் கடனில் பெரும்பகுதி சீனாவுக்குச் செலுத்த வேண்டியவை. சீனாவுக்கு மட்டும் இலங்கை 650 கோடி டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.

கடனுக்காகவும், பொருளாதார மீட்சிக்காகவும் சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் இலங்கையின் இந்தச் செயல், இலங்கையை சீனாவினுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும்’ என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.

ஏற்கெனவே, ஹம்பன்தோட்டா துறைமுக மேம்பாட்டுக்காக சீனாவிடம் பெற்ற 1400 கோடி டாலர் கடனை அடைக்க 2017-ம் ஆண்டிலிருந்து 99 ஆண்டுகளுக்கு அந்த துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டுள்ளது இலங்கை அரசு. இது மட்டுமின்றி, ஹம்பன்தோட்டா விமான நிலையம், தெற்கு விரைவுச் சாலை, அனல்மின் நிலையம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலமும் இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சீனாவை நம்பும் இலங்கை

அண்டை மற்றும் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவை நம்பாமல் சீனாவையே அதிகமாக இலங்கை நம்பி வருகிறது. சீனாவுக்குத் தர வேண்டிய கடன் தொகையை பொருளாதாரப் பிரச்சினையைக் காரணம் காட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இலங்கைப் பயணம் சென்றுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யிடம் பிரதமர் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வருவது இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாகும். குறிப்பாக ஹம்பன்தோட்டா துறைமுகம், கிழக்கு-மேற்கு சர்வதேச கடற்பகுதியில் இருக்கிறது. அந்த துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்தால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ராணுவத்தைக் குவிக்க நேரிடும், இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஏற்கெனவே தென் சீனக் கடல் பகுதியில் சீனா பிரச்சினை செய்துவரும் நிலையில் அது இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் உருவாகும்.

இந்தியாவுக்கு தாக்கம் என்ன?

அண்டை நாடுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்திய அரசு இலங்கையுடன் வெளிநாடு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் நெருக்கமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக இந்தியாவின் 3-வது அதிகபட்ச ஏற்றுமதி நாடு இலங்கைதான். இந்தியா-இலங்கை தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக 60 சதவீத இலங்கை ஏற்றுமதி நடக்கின்றன.

இலங்கையில் அதிகமாக முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, சமூகக் கட்டமைப்பான கல்வி, மருத்துவமனை, வீடுகள் கட்டுதல், சுத்தமான குடிநீர், கழிவறை, தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றுக்கு இலங்கையில் அதிக முதலீட்டை இந்தியா அளித்து வருகிறது. இந்திய அரசு வழியாக ரயில்வே, கட்டுமானம், பாதுகாப்பு உபகரணங்கள், தீவிரவாத எதிர்ப்பு, சோலார் திட்டம் உள்ளிட்டவை மூலம் 200 கோடி டாலர் அளவுக்கு நிதியுதவியை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது.

கடந்த 2005 முதல் 2019-ம் ஆண்டு வரை 170 கோடி டாலரை இலங்கையில் இந்திய நேரடி முதலீடாகச் செய்துள்ளது. மேலும் பெட்ரோலியம், ஹோட்டல், சுற்றுலா, உற்பத்தி, தொலைத்தொடர்பு , வங்கி, நிதிச்சேவையிலும் இலங்கையில் இந்தியா அதிகமான முதலீடு செய்துள்ளது

ஆனால், சீனாவிடம் காட்டும் அதீதமான நெருக்கத்தால் சமீபகாலமாக இந்தியாவின் நட்பிலிருந்து இலங்கை விலகி வருவதுபோல் தெரிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் திட்டத்தில் இந்தியா, ஜப்பானுடன் சேர்ந்து செயல்பட இருந்த இலங்கை திடீரென வாபஸ் பெற்றது.

இலங்கை ரிசர்வ் வங்கியுடன், இந்திய ரிசர்வ் வங்கி கரன்ஸி பரிமாற்ற ஒப்பந்தத்தை 2019-ம் ஆண்டு செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் 2022, நவம்பர் வரைஇருந்தாலும், இலங்கையின் பொருளாதார அவசர நிலை காரணமாக அதை நீடிக்க இரு நாடுகளும் விரும்பவில்லை.

இதற்கிடையே இலங்கை அரசு தனக்கிருக்கும் வெளிநாட்டுக் கடனை அடைக்க சீனாவின் உதவியையே அதிகம் நாடி வருகிறது. இலங்கையின் பட்ஜெட்டுக்குத் தேவையான 130 கோடி டாலர் கடன்கூட சீனா மேம்பாட்டு வங்கியிலிருந்து இலங்கை பெற்றது, 150 கோடி டாலர் அளவுக்கு சீனாவின் பீப்பிள்ஸ் பேங்கிலிருந்து கரன்ஸி ஸ்வாப் மூலம் இலங்கை பெற்றது.

இலங்கைக்கு அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்து சீன அரசு வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்றிக்கொண்டது. கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் 380 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்தது, இந்தியா 320 கோடி டாலருக்கு மட்டுமே ஏற்றுமதி செய்தது.

இலங்கையின் முக்கியமான கடல்வழித் தடத்தில் அதிகமான முதலீட்டை சீனா செய்துவருவது இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறிவருகிறது. கடந்த 2006 முதல் 2019-ம் ஆண்டுவரை இலங்கையின் கடல்வழிக் உள்கட்டமைப்புக்கு 1200 கோடி டாலரை சீனா முதலீடு செய்திருக்கிறது. இலங்கையில் சீனாவின் படிப்படியான ஆதிக்கம் இந்தியாவின் தென்பகுதி எல்லைக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்பதால் இந்தியா எச்சரிக்கையாக இருந்து வருகிறது.

பொருளாதார ரீதியாக இலங்கைக்கு அதிகமான ஏற்றுமதியை இந்தியா செய்து வருகிறது. குறிப்பாக ஆடைகள், ஜவுளிகளை அதிகமாக இந்தியா ஏற்றுமதி செய்துவருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையால், நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தும் காலம் அதிகரிக்கும், அமெரிக்க டாலருக்கு நிகாரன இலங்கை ரூபாயின் மதிப்பு 10 சதவீதம் சரிந்துவிட்டதும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவிலிருந்து பருத்தி ஆடைகள், ஆயத்த ஆடைகள் மட்டுமின்றி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், காலணி, கணினி உதிரிபாகங்கள், இரும்பு, உருக்கு போன்றவையும் ஏற்றுமதியாகின்றன. இலங்கை பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கும்போது அது இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தேக்கநிலையானது, இலங்கையின் பொருளாதாத்தை மேலும் சுருக்கி நிரந்தரமான நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.

இந்த நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு, இலங்கையைத் தங்கள் பக்கம் சாய்க்கவும், பொருளாதார அடிமையாக மாற்றவும் சீனா முயன்று வருகிறது. இதில் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் சிக்கித் தவிக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால், சீனாவின் கிளை நாடு என்ற அடைமொழியோடு இலங்கை வரலாம். சீனாவின் வேர் பரவுவது இந்தியாவுக்கு எப்போதும் ஆபத்துதான்

இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் வந்தனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள நிலை பற்றி கூறியதாவது:

இலங்கையின் பொருளதாரா நிலைமை மோசமாகி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். முன்பு ரூ.10 ஆயிரம் கொண்டு சென்றால் 15 நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவருவேன். இன்று 5 நாட்களுக்குகூடப் பொருட்களை வாங்க முடியவில்லை. வருமானம் உயரவில்லை, ஆனால், விலைவாசி உயர்ந்துவிட்டது.

ஒரு மஞ்சள் பொடி பாக்கெட் விலை ரூ.300 விற்கிறது, தேங்காய் ஒன்று 100 ரூபாய் விற்கிறது, தக்காளி விலை 300 ரூபாய்க்கு விற்கிறது. எந்தப் பொருள் எடுத்தாலும் விலை உயர்ந்துவிட்டது. சமையல் கேஸில் கலப்படம் செய்து சிலிண்டர்கள் வெடிப்பதாக வந்த செய்தியால் சிலிண்டர் நிறுத்தப்பட்டது.

இதனால் மண்ணெண்ணெய் அடுப்பில்தான் சமைக்கிறோம். மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காலை 5 மணிக்கு வரிசையில் நின்றால்தான் வாங்க முடிகிறது. இப்படியே சென்றால் இலங்கையின் நிலைமை சோமாலியா, எத்தியோப்பியா போன்ற பஞ்சம் ஏற்படும் நாடாக மாறிவிடும் போல் இருக்கிறது. கூலி வேலைக்குச் செல்பவர்கள் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. குழந்தைகளுக்குச் சரிவர உணவு கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

அனைத்து வளங்களும் எங்கள் நாட்டில் இருந்தபோதிலும் ஏன் இந்த சிரமம் எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு அந்தப் பெயரைக் கூற மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட நாட்டின் தலையீடு அனைத்து விஷயங்களிலும் இருப்பதைக் காண முடிகிறது, பள்ளியில்கூட அந்த நாட்டின் மொழியைத் திணிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். முன்பெல்லாம் சாலையின் பெயர்ப் பலகையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மட்டும் இருக்கும் தற்போது அந்த நாட்டின் மொழியும் சேர்ந்துவிட்டது. ஏன் அந்த நாட்டைச் சார்ந்து இலங்கை இருக்கிறது எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x