Published : 08 Jan 2022 03:47 PM
Last Updated : 08 Jan 2022 03:47 PM
நியூயார்க்: நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறையினுடைய சாவியின் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நெல்சன் மண்டேலா. இந்த 27 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் ரோபன் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில தினங்கள் முன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் செயல்பட்டு வரும் கர்ன்சேஸ் (Guernsey's) என்கிற ஏல நிறுவனம், வரும் 28ம் தேதி மண்டேலா தங்கியிருந்த சிறை அறையின் சாவி ஏலம் விடப்படும் என்று அறிவித்தது.
மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறைக்கு காவலராக இருந்த கிறிஸ்டோ பிராண்ட் என்பவர் மூலம் இந்த சாவி ஏலம் விடப்பட இருந்தது. சாவியுடன் நெல்சன் மண்டேலா தன் கைகளால் வரைந்த 'தி லைட் ஹவுஸ்' என்னும் ஒரு ஓவியம் மற்றும் அவர் பயன்படுத்திய ஒரு சைக்கிள் போன்ற சில பொருட்களும் ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் கிடைக்கும் வருமானம் மண்டேலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது சொந்த கிராமத்தில் நினைவுத் தோட்டம் அமைக்க பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்தது.
இந்த ஏலத்துக்கு தென் ஆப்பிரிக்கா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. "சிறைச் சாவி தென்னாப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமானது. அந்தச் சாவி தென் ஆப்பிரிக்காவின் வலி நிறைந்த வரலாற்றை வெளிப்படுத்தும் அடையாளம். மேலும், தென் ஆப்பிரிக்கா சந்தித்த மிகப்பெரிய சுதந்திர போராட்டத்தின் ஆதாரம் அது. அந்தச் சாவியின் உரிமை தென் ஆப்பிரிக்க மக்களுக்கே இருக்கிறது. எனவே, அது எங்கள் கைகளுக்கு வரவேண்டும்" என்று தென் ஆப்பிரிக்க கலாசார அமைச்சர் நாதி தெத்வா தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இதனிடையே, நீண்ட சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. 'சிறைச்சாலை சாவி அரசின் அனுமதி இல்லாமல் வெளியே கொண்டுச் செல்லப்பட்டுள்ளது' எனத் தென் ஆப்பிரிக்க அரசு, அமெரிக்க நிறுவனத்திடம் தெரிவித்ததை அடுத்து, ஏலத்தை நிறுத்திவைக்க அந்நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT