Published : 07 Jan 2022 07:28 PM
Last Updated : 07 Jan 2022 07:28 PM

ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் தொடரும் வெள்ளை அங்கி போராட்டம்

யங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சுகாதார பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மியான்மரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. அவசர நிலையையும் மியான்மர் ராணுவம் அறிவித்தது.

வெடித்த போராட்டம்:

மியான்மரில் ராணுவம், ஆட்சியை கைபற்றியதை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இளைஞர்கள், மருத்துவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் வீதிக்கு வந்து மியான்மர் ராணுவத்துக்கு எதிராக போராடினர்.

இதில் குறிப்பாக மியான்மர் மருத்துவர்களின் போராட்டம் உலகளவில் அனைவரது பார்வையும் ஈர்த்தது. சுமார் 55 மருத்துவமனைகளை ராணுவம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் மருத்துவர்களும், செவிலியர்கள் சாலைகளில் இறங்கி பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். தற்போதும் இந்தப் போராட்டத்தைதான் பலர் மருத்துவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

மியான்மர் மருத்துவர்களின் இந்தப் போராட்டம் ’வெள்ளை அங்கி போராட்டம்’ என அழைக்கப்படுகிறது. மியான்மரில் சுமார் 500 சுகாதார பணியாளர்கள் மியான்மர் ராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் உட்பட 25 சுகாதார பணியாளர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 190 சுகாதார பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க மியான்மரில் ராணுவ அடக்குமுறை காரணமாக, 70% சுகாதார பணியார்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளதால் மியான்மரில் மருத்துவ நெருக்கடி ஏற்பட்டது. எனினும் அவர்கள் குழுக்களாக இயங்கி மியான்மர் மக்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகின்றனர்.

மருத்துவர் ஒருவர் கூறும்போது, ”மருத்துவர்களாகிய எங்களது கடமை, நோயாளிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகும். ஆனால், சட்டத்திற்குப் புறம்பான, ஜனநாயகமற்ற அடக்குமுறை ராணுவ அமைப்பின் கீழ் இதை எப்படிச் செய்ய முடியும். ஐம்பது ஆண்டுகால ராணுவ ஆட்சி நாட்டின் சுகாதார அமைப்பை உருவாக்கத் தவறி விட்டது, அதற்குப் பதிலாக வறுமை, சமத்துவமின்மையை புகுத்தியது. இந்த நிலைக்கு மீண்டும் நாம் திரும்ப முடியாது.” என்றார்.

யன்கான் மருத்துவ கல்லூரி ஆசிரியர் கிரேஸ் கூறும்போது, ”அவர்கள் தேர்தலில் தோற்றபிறகு எங்கள் நாட்டு தலைவர்களை எப்படி கைது செய்வார்கள். ஒவ்வொரு இரவு 8 மணியின்போது பள்ளிக் கூடங்கள் முன் புரட்சிக்கர பாடல்களை பாடி வருகிறோம். ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் யாராவது காயம் அடைந்தால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை செய்கிறோம். இதற்காக ஒரு தன்னார்வ அமைப்பே இயங்குகிறது” என்றார்.

செவிலியர் லுக் கூறும்போது,” ராணுவம் என்னை ஏப்ரல் 5 ஆம் தேதி கைது செய்தது. முதலில் என்னை தாக்க மாட்டேன் என்று கூறினார்கள். ஆனால் என்னை கேள்வி கேட்டு அடித்தார்கள். 50 பேர் ஒரே சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு ஒரே கழிவறைதான் இருந்தது. குடிக்கக் கூட தண்ணீர் இல்லை. நான் சுமார் 87 நாட்கள் சிறையில் இருந்தேன். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் போராட்டங்களில் காயமடைந்தவர்களுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை. அவர்களைவிட இங்கு சிறந்த முறையில் பொதுமக்களுக்கும், போராட்டக்காரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில செவிலியர்கள் ரகசியமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பணி செய்கிறார்கள். அவர்கள் வெளியே செல்லும்போது சீருடை ஆடைகளை அணிவதில்லை. ராணுவத்தால் கைது செய்யபடுவோமா என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது. மேலும் நோயாளிகளின் வீடுகளிலிருந்து தொலைபேசி வாயிலாக அழைப்பு வரும்போது உண்மயமாக நோய்வாய்பட்டதன் காரணமாகதான் எங்களை அழைக்கிறார்கள் என்ற ஐயமும் உள்ளது” என்றார்.

மற்றொரு செவிலியர் கூறும்போது, “கோவிட் காலத்தில் பெரும் சிரமத்தை சந்தித்தோம். எனினும் 70% மியான்மர் சுகாதார பணியர்கள் எங்களுடன் தான் பணிபுரிந்தார்கள். இதன் காரணமாக நாங்கள் சாமாளித்தோம். பிற நாடுகளைபோல் மியான்மரில் சுகாதார பணியாளர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கிடையாது. ஆனால் கரோனா வந்தபிறகுதான் எங்களுக்கான முக்கியதுவம் கிடைத்தது.

கரோனா காலத்தில் நாட்டை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம். அதன்பிறகு ராணுவம் ஆட்சியை கைபற்றிவிட்டது. ராணுவ ஆட்சியில் சுகாதார பணியாளர்கள் ஒதுக்கப்பட்டனர். இதன் காரணமாகவே நாட்டின் பெரும்பான்மையான சுகாதார பணியாளர்கள் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக உள்ளோம் ” என்றார்.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஒருவருடம் நெருங்கப் போகிறது. மக்களும், சுகாதார பணியாளர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுவரை மியான்மரில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 1500க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், உலக நாடுகளின் கேள்விகளுக்கு மியான்மர் ராணுவம் செவிமடுக்காமல் இருந்து வருகிறது... மியான்மரில் பின்னோக்கி சுழட்டப்பட்ட ஜனநாயகம் முன்னோக்கி சுழலுமா காத்திருப்போம்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x