Published : 06 Jan 2022 08:00 AM
Last Updated : 06 Jan 2022 08:00 AM
மெல்போர்ன்: டென்னிஸ் நட்சத்திரமும் 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவாக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், ஆஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்றிரவு மெல்போர்ன் விமான நிலையம் வந்த நோவாக் ஜோக்கோவிச் விசா ரத்து செய்யப்பட்டது. இதனால், அவர் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரது விசா ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
விசா ரத்து செய்யப்பட்டதால் அவர் மீண்டும் செர்பியா திரும்பினார். இது குறித்து ஜோகோவிச்சின் தந்தை ட்விட்டரில், "நமது மகன். நமது தேசத்தின் பெருமித அடையாளம் திரும்புகிறார். நாம் அனைவரும் அவரை வரவேற்க வேண்டும். அவருக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நீதி வேண்டும்" என்று கூறியிருந்தார்.
ட்வீட் தான் காரணமா? முன்னதாக நோவா ஜோகோவிச் தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு மருத்துவ விலக்கு கிடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், ஆஸ்திரேலிய அரசு இதை எதையும் பரிசீலிக்கவில்லை. தடுப்பூசி மருத்துவச் சான்றிதழ் இல்லாததால் 9 முறை ஆஸி., கிராண்ட்ஸ்லாம் வென்ற செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் விசாவை ரத்து செய்தது. இது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ விலக்கை ஆஸ்திரேலிய ஓபன் போட்டி ஒருங்கிணைப்பாளர் குழுவின் சிறப்புப் பிரிவு பரிசீலித்து வழங்க வேண்டும். இதற்காக ஜோகோவிச் தரப்பு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன், "சட்டம் அனைவருக்கும் சமமானதே. சட்டத்திற்கு மேலானோர் யாருமில்லை. எல்லைப் பாதுகாப்பில் சமரசமே இல்லை" என்று கூறினார்.
அதேபோல், ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கேரன் ஆண்ட்ரூஸும், எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையாக விசா ரத்து செய்யப்பட்டதற்காக நாங்கள் வருந்தத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
முன்னதாக விசா ரத்து தொடர்பாக ஆஸ்திரேலி எல்லைப் பாதுகாப்புப் படை விடுத்த அறிக்கையில், ஆஸ்திரேலிய அரசு கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கோரிய மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நோவாக் ஜோகோவிச் தவறிவிட்டார். அதனாலேயே அவரது விசா ரத்து செய்யப்பட்டது என்று கூறியுள்ளது.
செர்பியா கண்டனம்: என்னதான் காரணாம் கூறப்பட்டாலும் கூட தங்கள் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் அவமதிக்கப்பட்டுவிட்டதாக செர்பியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் வூஸுக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் ஜோகோவிச்சிடம் தொலைபேசியில் பேசினேன். செர்பியா மக்கள் அனைவரும் துணை நிற்போம் என்று கூறினேன். விசா விவகாரத்தில் தரக்குறைவாக நடத்தப்பட்ட பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதியளித்தேன். சர்வதேச பொதுச் சட்டத்துக்கு உட்பட்டு ஜோகோவிச்சுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நீதி கோரப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT