Published : 05 Jan 2022 09:31 AM
Last Updated : 05 Jan 2022 09:31 AM
ஜெனீவா: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதைத் தொடரலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கரோனா மேலாண்மை உதவிக் குழு தலைவர் ஆப்டி மஹமூத் கூறியதாவது: கரோனா பாதித்தவர்களை எத்தனை நாட்கள் தனிமைப்படுத்துவது என்பது குறித்து அந்தந்த நாடுகள் உள்நாட்டு நிலவரத்தைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும். கரோனா பாதித்தவர்களுக்கு 14 நாட்கள் தனிமை என்ற பழைய அறிவிப்பையே தொடரலாம். ஆயினும் சில நாடுகளில் கரோனா அன்றாட பாதிப்பு மிகமிக அதிகமாக இருக்கின்றன. அங்கு தனிமைப்படுத்தும் நாட்களை 5 முதல் 7 நாட்களாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் அங்கு தேசத்தை நடத்த ஆள்பலம் தேவைப்படும். குறைவான பாதிப்பு உள்ள நாடுகளில் நிச்சயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலையே தொடரலாம். இதனால் தொற்றுப் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.
ஒரே நேரத்தில் ஒருவருக்கு கரோனாவும், இன்ஃப்ளூவென்சாவும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. ஏனெனில் இரண்டுமே உடலை வெவ்வேறு வழியில் தாக்கும் இருவேறு வைரஸ். அதனால் இந்த இரண்டு வைரஸ்களும் இணையும் அபாயமும் உள்ளது என்றார். இஸ்ரேலில் ஃப்ளோரோனா எனும் இரட்டை உருமாற்ற வைரஸை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கரோனா வைரஸும் சேர்ந்து ஒருங்கிணைந்து இருப்பதால், ஃப்ளோரோனா வைரஸ் எனும் பெயர் வைத்துள்ளனர். இதனையொட்டி எழுப்பப்பட்ட கேள்விக்கே ஆப்டி மஹமூத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுவரை உலகம் முழுவதும் 128 நாடுகளில் ஒமைக்ரான் வகை வைரஸ் பரவியுள்ளது. ஆனால் முதன்முதலில் ஒமைக்ரான் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் இந்தத் தொற்றுப் பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது. அங்கே மருத்துவமனையில் அனுமதியாவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைவாக உள்ளது. இதுவே எல்லா நாடுகளிலும் நிலவும் என்று கூற முடியாது. ஒமைக்ரான் பற்றிய அண்மை ஆராய்ச்சியில், நுரையீரலை நேரடியாகப் பாதிக்காமல் அப்பர் ரெஸ்பிரேட்டரி சிஸ்டத்தையே இவ்வகை வைரஸ் அதிகம் பாதிப்பது தெரியவந்துள்ளது. இது ஒரு நற்செய்தி. இணை நோய், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு கொண்டோரும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதாரும் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
கரோனா வைரஸின் பரவும் தன்மை மிகமிக அதிகம். உலகம் இதுவரை இந்த வேகத்தில் பரவும் ஒரு வைரஸை எதிர்கொண்டதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வரும் ஜனவரி 19 ஆம் தேதி உலக சுகாதார அமைப்பின் ஸ்ட்ராடஜிக் ஆலோசனைக் குழு கூடுகிறது. இதில், பூஸ்டர் டோஸ்களின் இடைவெளி, தடுப்பூசிகளை கலந்து வழங்குவது, எதிர்கால தடுப்பூசிகளின் உள்ளடக்கம் ஆகியன பற்றி ஆலோசிக்கப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT