Published : 04 Jan 2022 12:30 PM
Last Updated : 04 Jan 2022 12:30 PM

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று: 2 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு

நியூயார்க்: கரோனா தொற்று ஏற்பட்டது முதல் இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவை பாதிப்பு சுனாமியாக தாக்கியுள்ளது. அங்கு முதன்முறையாக கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சம் பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கரோனா தொற்று, ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பின், பரவலில் வேகமெடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

ஆனால், தென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதேபோல பிரிட்டன், டென்மார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆனால் அமெரிக்காவில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. இதனால் உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதத்துக்கும் அதிகமாக கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக, அமெரிக்காவில் கடந்த டிசம்பர் 31-ம் ததி மணி நேரத்தில் 5,72,093 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இது இதற்கு முன்பு இதுவரை இல்லாத பாதிப்பாக இருந்தது. இதன் பிறகு தொடர்ந்து அங்கு கரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு 590,000 என்ற எண்ணிக்கையில் தொற்று உறுதியானது. இது முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்தநிலையில் அங்கு முதன்முறையாக கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சம் பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி முந்தைய நாளை விட 1,042,000 என்ற எண்ணிக்கையில் தொற்று ஏற்பட்டுள்ளது.

எனினும் அனைத்து மாகாணங்களும் சரியான அறிக்கை அளித்துள்ளதா என்பதை உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை எனவும், அதிக எண்ணிக்கையிலான தொற்று பதிவாகியுள்ளதை மட்டும் உறுதி செய்ய முடிவதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஐந்தில் ஒரு பங்கு மாநிலங்கள் சனிக்கிழமை மற்றும் மூன்றில் ஒரு பங்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன. கரோனா அதிகமான பிறழ்வு மாறுபாடு காரணமாகவே அமெரிக்காவில் இந்த எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து எந்த நாடும் இதுவரை சந்தித்திராத அளவுக்கு ஒரு பெரிய வித்தியாசத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் நான்கு நாட்களுக்கு முன்பு சுமார் 590,000 என்ற முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். இந்த எண்ணிக்கை எந்த நேரத்திலும், வேறு எந்த நாட்டிலும் இதுவரை இல்லாததாகும். இந்தியாவின் டெல்டா பாதிப்பின் போது மே 7, 2021 அன்று 414,000 க்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தொற்ற கண்டறியப்பட்டது. இது அமெரிக்காவிற்கு வெளியே அதிக எண்ணிக்கையாக இருந்தது.

இதுமட்டுமின்றி அமெரிக்காவில் வெளியிடப்படும் இந்த எண்ணிக்கையைவிட உண்மை எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கலாம். பல அமெரிக்கர்கள் தாங்கள் வீட்டிலேயே மேற்கொள்ளும் சோதனைகளை செய்து கொள்கின்றனர். இந்த முடிவுகள் அதிகாரப்பூர்வ அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. எனவே உண்மையான பாதிப்பு எண்ணிக்கை அரசு வெளியிடும் புள்ளி விவரங்களை விடவும் அதிகமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x