Published : 01 Jan 2022 03:29 PM
Last Updated : 01 Jan 2022 03:29 PM

ஒமைக்ரானே இன்னும் போகல… இஸ்ரேலில் கரோனா உருமாற்ற புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

பிரதிநிதித்துவப்படம்

டெல் அவைவ்: கரோனா வைரஸில் தொடங்கி ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான், டெல்மைக்ரான் என வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. உலக அளவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அடுத்த வைரஸ் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் ஃப்ளோரினா எனும் இரட்டை உருமாற்ற வைரஸை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கரோனா வைரஸும் சேர்ந்து ஒருங்கிணைந்து இருப்பதால், ஃப்ளோரோனா வைரஸ் எனும் பெயர் வைத்துள்ளனர் என்று அராப் நியூஸ் தெரிவித்துள்ளது.

டெல் அவைவ் நகரில் உள்ள ராபின் மருத்துவ மையத்துக்கு பிரசவத்துக்காக ஒரு பெண் சென்றார். அந்தப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ், இன்ஃப்ளூயன்ஸா இரண்டும் இணைந்த ஃப்ளோரோனோ வைரஸ் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த கர்ப்பிணிப் பெண் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று இஸ்ரேல் நாளேடான யேதியோத் அஹ்ரோநோத் தெரிவி்த்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் டெல்டா வைரஸ், ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வரும் நிலையில் இஸ்ரேலில் ஃப்ளோரோனோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மேலும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், 2 மாதங்களுக்குள் உலகில் ஏராளமான நாடுகளுக்குப் பரவிவிட்டது. ஏற்கெனவே மக்களை பாதித்துவந்த டெல்டா வைரஸை ஓரங்கட்டி, தற்போது ஒமைக்ரான் வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கரோனா வைரஸும் தாக்கினால் வரக்கூடியது ஃப்ளோரோனா என்று இஸ்ரேல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுப் பரிசோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பியுள்ளனர்.

கெய்ரோ பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் நாலா அப்தெல் வஹாப் கூறுகையில், “ ஃப்ளோரோனா வைரஸ் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால் இரு வைரஸ்கள் மனிதர்களை ஒரே நேரத்தில் தாக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி திறன் கடுமையாக பாதிக்கும்” எனத் தெரிவித்தார்.

உலகில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் மக்களுக்கு 3-வது தடுப்பூசியாக பூஸ்டர் டோஸைச் செலுத்தி வருகின்றன. ஆனால், இஸ்ரேல் அரசு, தங்கள் மக்களில் மிகவும் பலவீனமானவர்களுக்கு 4-வது தடுப்பூசியையும் செலுத்தத் தொடங்கிவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x